வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் 2015க்கு பின் மான் வகைகள் அதிகரிப்பு
2015 ம் ஆண்டு வன உயிரினங்கள் கணக்கெடுத்த போது வெளிமான்கள் 145, கடமான் 11, புள்ளிமான் 16 தற்போது 2021-22ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது வெளிமான்கள் 255, கடமான் 36, புள்ளிமான் 53 என எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவில், திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வல்லநாடு வெளிமான் சரணாலயம். 1641.21 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், கடந்த 1987-ம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் தென்கோடியில், வெளிமான்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சரணாலயம் இது. மேலும் இது, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே வனவிலங்கு சரணாலயம் ஆகும். தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம், மான்களுக்கு மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களுக்கு புகலிடமாக அமைந்து உள்ளது. இங்கு வெளிமான், புள்ளிமான், மிளா மற்றும் முயல், நரி, பல வகையான பாம்புகள், பறவைகள், முள்ளம்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் இந்த சரணாலயத்தில் வண்ணத்து பூச்சிகளும் தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடித்து உள்ளன.
இந்த நிலையில் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த சுகன் கிறிஸ்டோபர் என்பவர் பல்வேறு தகவல்களை தகவல் அறியும் சட்டம் மூலம் வனத்துறையினரிடம் கேட்டிருந்தார்.அதற்கு வனத்துறையினர் பதில் அளித்துள்ளனர். அதில் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடமான், வெளிமான், புள்ளிமான், கீரி, முள்ளம்பன்றி, முயல், பாம்பு, மயில் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. கடந்த 2015 ம் ஆண்டு வன உயிரினங்கள் கணக்கெடுத்த போது வெளிமான்கள் 145, கடமான் 11, புள்ளிமான் 16 என்ற எண்ணிக்கையில் இருந்து வந்தது. தொடர்ந்து அதன் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021-22ம் ஆண்டு வந்த வன உயிரினங்கள் கணக்கெடுப்பின்போது வெளிமான்கள் 255, கடமான் 36, புள்ளிமான் 53 என பல மடங்கு வன உயிரினங்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
வல்லநாடு சரணாலயத்தில் வருடம் தோறும் மரங்கள் உற்பத்தி செய்ய நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. வன உயிரினங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. நீர் தடுப்பணை, கண்காணிப்பு கோபுரங்கள் சீரமைக்கும் பணிகளும் நடந்துள்ளது.கடந்த 2015 ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் 2 கோடியை 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 1 கோடியை 9 லட்சம் ரூபாய் இந்தாண்டு வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு வண்ணத்துப்பூச்சி திருவிழாவின் போது தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், வல்லநாடு சரணாலயத்தில் வனவிலங்குகளின் குடிநீரை தேவையை போக்க நிரந்தரமான நீர் ஆதாரம் இல்லை. ஆனால் 7 சிறிய குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தடுப்பணைகள் அமைத்து உள்ளோம். சிறிய தொட்டிகளும் கட்டி வைக்கப்பட்டு உள்ளன. ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன்மூலம் தண்ணீரை தொட்டிகளில் தேக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சரணாலயத்தை சுற்றி குவாரிகள் உள்ளன. இதனால் மான்கள் நடமாடக்கூடிய பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த சரணாலயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது