நெல்லையில் விளைநிலங்களை சேதப்படுத்திய கால்நடைகளால் விவசாயிகள் கவலை..! பசு மாடுகள் அனைத்தும் சிறைபிடிப்பு...!
பெரு வெள்ள பாதிப்பிலிருந்தே இன்னும் மீளாத நிலையில் இது போன்ற நிகழ்வு மேலும் தங்களை கவலையடையச் செய்திருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நெல்லை மாநகரத்திற்கு உட்பட்ட மேலநத்தம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் நன்செய் பயிரான நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த பெருமழை வெள்ளத்தால் பெரும்பாலான இடங்களில் விவசாய நிலங்கள் நீரில் முழ்கியது, இதில் பயிர்கள் அனைத்தும் சேதமானது, இருப்பினும் ஒரு சில இடங்களில் லேசான பாதிப்பும் ஏற்பட்டது. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் விவசாயிகள் பலர் மீள முடியாமல் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இச்சூழலில் நேற்று இரவு மேலப்பாளையம் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட பசு மாடுகள் விளைநிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
பசுமாடுகள் நெற்பயிர்களை சேதப்படுத்துவதை கண்டு கவலையடைந்த கீழ நத்தம் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து விலை நிலங்களுக்குள் புகுந்த 20க்கும் மேற்பட்ட பசுமாடுகளை சிறை பிடித்தனர். தொடர்ந்து பிடிபட்ட மாடுகளை அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் அடைத்தனர். இச்சூழலில் தற்போது வரை சிறைபிடிக்கப்பட்ட பசு மாடுகளுக்கு யாரும் உரிமை கோரி வராத நிலையில் இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இறைச்சி கறிக்காக கொண்டு வரப்பட்ட மாடுகள் இவ்வாறு அவிழ்த்து விடப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பி உள்ள விவசாயிகள் முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் நெற்பயிரை மாடுகள் நாசம் செய்துள்ளது தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
பெரு வெள்ள பாதிப்பிலிருந்தே இன்னும் மீளாத நிலையில் இது போன்ற நிகழ்வு மேலும் தங்களை கவலையடையச் செய்திருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். விவசாயம் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்கின்றனர் ஆனால் எங்களை போன்ற விவசாயிகளை பாதுகாக்க யாரும் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் நெல்லை மாநகரில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல விளைநிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்த பசுமாடுகளையும் பிடித்து அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.