மேலும் அறிய
புத்தகம் இருக்கு- படிக்கத்தான் இடமில்லை- தூத்துக்குடி மத்திய நூலகத்தின் நிலை : நடவடிக்கை எடுக்கப்படுமா?
தற்போது நூலகம் திறக்கப்பட்டாலும் படிக்க குறிப்பெடுக்க இடமில்லாதது வேதனை அளிப்பதாக கூறுகின்றனர் போட்டித் தேர்வர்கள்

தூத்துக்குடி மத்திய நூலகம்

தூத்துக்குடி மாவட்ட மத்திய நூலகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு ரூ 48 இலட்சம் திட்டம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தூத்துக்குடி மத்திய நூலகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வருகின்றன. இங்கு இருந்து தான் மாவட்டத்தில் உள்ள 70 நூலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது, தனித்தேர்வர்களுக்காக புத்தகங்கள், நீட் தேர்வுகள் புத்தகங்கள் என புத்தகங்கள் வந்து கொண்டே இருந்தாலும் அதனை பத்திரமாக வைக்கத்தான் இடமில்லாமல் படிக்கட்டுகளில் தவமிருக்கிறது.

கீழ்த்தளத்தில் நூலகம், மேல் தளத்தில் நூலக அலுவலகம், அதில் ஒருபகுதியிலேயே பிரித்து அனுப்பும் பகுதி என எக்கச்சக்க இட நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
புத்தகங்களை அடுக்கி வைக்க அலமாரிகள் அதிகரிக்க அதிகரிக்க வாசகர்கள், போட்டி தேர்வுக்கு படிப்போர், தங்களுக்கு தேவையான குறிப்புகளை அமர்ந்து எடுக்கவோ இடமில்லாத நிலை உள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் போட்டி தேர்வு மையங்களில் நூற்றுக்கணக்கானோர் பயின்று வருகின்றனர். இதில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் தூத்துக்குடி மத்திய நூலகத்தில் கிடைக்கிறது. ஆனாலும் அமர்ந்து படிக்க ஏதுவாக இடமில்லாததால் நூலக வாயிலிலேயே அமர்ந்து தேர்வுக்கான குறிப்புகளை எடுத்து வருகின்றனர்.

போட்டி தேர்வு எழுதுபவர்கள், பல்வேறு தேர்வுக்காக பயில்பவர்கள் தங்களுக்கு தேவையான பகுதிகளை மத்திய நூலகத்திலேயே பிரிண்ட் எடுப்பதற்கு தேவையான ஜெராக்ஸ் மெசின்கள் இருந்தது எனக்கூறும் வாசகர்கள் இப்போது இட நெருக்கடியால் காணாமல் போய் விட்டதாக கூறுகின்றனர். தூத்துக்குடி மத்திய நூலகத்தில் 20 ஆயிரம் வாசகர்கள் உள்ளனர்.
இந்த மத்திய நூலகத்தின் மேல்தளத்தில் ஒருபகுதியில் அலுவலகம் செயல்பட்டாலும் கூட மற்றொரு பகுதி கட்டப்படாமல் காலியாக உள்ளது. இதில் வாசகர்கள் குறிப்பாக தனித்தேர்வர்கள், போட்டி தேர்வர்கள் படிக்க தங்களுக்கு தேவையான குறிப்புகளை எடுக்க, அறை அத்தியாவசியமாக இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தனியார் நிறுவனங்களில் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் அமைத்தால் நல்லது என கூறும் அலுவலர்கள், இதற்காக ஒவ்வொரு நிறுவனங்களின் வாசலிலும் ஏறி இறங்கினாலும் இதுவரை திட்டம் செயல்படுத்த யாரும் கிடைக்கவில்லை என்பதை வருத்தங்களுடன் பதிவு செய்கின்றனர். தினந்தோறும் வரும் புத்தகங்கள் படிக்கட்டுகளில் படிக்கட்டாக இருப்பதால் அலுவலக ஊழியர்கள் தட்டுத்தட்டுமாறிதான் நூலக அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. போதிய குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லை என கூறும் வாசகர்கள், அதுக்கூட பரவாயில்லை, படிக்க குறிப்புகளை எடுக்கக்கூட இடமில்லை என்கின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனங்கள் இதனை கட்டித்தர முன்வருமானால் அந்த பகுதிக்கு அந்நிறுவனத்தின் பெயரை வைத்து கொள்ளலாம் என கூறும் நூலக அலுவலர்கள், தொடர்ந்து முயற்சிக்கிறோம்,- முயற்சி பலனளிக்கும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறோம் என்கிறார். நூலகம் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்ததால் தேர்வுக்கு பயில்வோர், வாசகர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது நூலகம் திறக்கப்பட்டாலும் படிக்க குறிப்பெடுக்க இடமில்லாதது வேதனை அளிப்பதாக கூறுகின்றனர். தமிழக முதல்வர் தன்னை சந்திக்க வருபவர்களிடம் புத்தகங்கள் பெறுகிறார். அவரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிறது தூத்துக்குடி மத்திய நூலகம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















