பேரவை விதிகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் எதுவும் நடக்கவில்லை - ஜெயக்குமாருக்கு சபாநாயகர் அப்பாவு பதில்
சட்டசபை பேரவை விதிகளுக்கு உட்பட்டுதான் நடைபெற்று வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நெல்லை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை அம்பேத்கர் நகரில் ஏற்கனவே தூய்மை பணியாளர்களுக்கு 366 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருந்து வந்தது.
அடிக்கல் நாட்டு விழா:
இதில் மக்கள் குடியிருந்த நிலையில் இந்த கட்டிடம் பழுதடைந்துவிட்டதால் இதனை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு. 53.19 கோடி ரூபாய் மத்தியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது. இதனை அடுத்து பழமையான குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய குடியிப்பு கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த புதிய குடியிருப்பில் 408 வீடுகள் 400 சதுர அடியில் பயனாளிகள் பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாயும் அரசு சார்பில் 13 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வீடு கட்டப்படுகிறது.
விழாவில் பேசிய சபாநாயகர்,"திமுக ஆட்சி பொறுப்பேற்று 2½ ஆண்டுகள் ஆன நிலையில் அதிக அளவில் சாமானிய மக்களுக்கான திட்டங்கள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, இல்லம் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் என ஏராளமான திட்டங்கள் இன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் சாமானிய மக்களின் வீட்டை பற்றி சிந்திக்கும் அரசு நடக்கிறது. ஏழை, எளிய சாமானிய ஒடுக்கப்பட்ட மக்களின் கையை தூக்கிவிடும் அரசாக திமுக அரசு உள்ளது" என்றார். இதனைத்தொடர்ந்து வீடுகள் பெறும் மக்களுக்கு அதற்கான ஆணையை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் கூறும் பொழுது, "அம்பேத்கர் நகரில் பழுதடைந்த பழைய வீடுகளுக்கு பதிலாக புதிய 408 வீடுகள் கட்டுவதற்கு தமிழக முதல்வர் ஆணையிட்டு அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்று முதல் 18 நாட்களுக்குள் அந்த பணி முடிவடைந்து 408 பயனாளிகளும் புதிய இல்லங்களில் குடியிருப்பார்கள்." என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபை விதிமுறைகளுக்கு புறம்பாக சபாநாயகர் செயல்படுவதாக கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சட்டமன்றத்தில் விதிப்படியும் சட்டப்படியும் அவை நடவடிக்கைகள் நடந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பாகவோ அல்லது பேரவை விதிகளுக்கு புறம்பாகவோ எந்த நடவடிக்கையும் சட்டமன்றத்தில் நடைபெறவில்லை. அவர் சட்டமன்றத்திற்கு வராத காரணத்தினால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியவில்லை என கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்