Nainar Nagendran: மனிதாபிமான அடிப்படையில் மாஞ்சோலை மக்களுக்கு தமிழக முதல்வர் கருணை காட்ட வேண்டும்-நயினார் நாகேந்திரன்
”மாநில அரசு கருணை அடிப்படையில் அதே இடத்தில் வேலை செய்யவும் அதே இடத்தில் அவர்களுக்கு உறைவிடமும், உணவும் கிடைக்க மாநில அரசு உதவி செய்ய வேண்டும்”

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் 25 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை ஒட்டி காலை முதலே நெல்லை ஆட்சியர் அலுவலக சாலை, தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி என காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்விற்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராடிய சம்பவத்தில் 17 பேர் இதே இடத்தில் உயிர் நீத்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே நேரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அன்று ஒரு இழப்பு ஏற்பட்டது போல் இப்பொழுதும் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியில் தேயிலை தோட்ட நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஓய்வு பணமாக இரண்டு லட்சம் தருவதாக கூறி முதற்கட்டமாக 25% நிதி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.
30 ஆம் தேதி வரக்கூடிய தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசு கருணை அடிப்படையில் அதே இடத்தில் வேலை செய்யவும் அதே இடத்தில் அவர்களுக்கு உறைவிடமும், உணவும் கிடைக்க மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் தமிழக அரசை, முதல்வரை மனிதாபிமான அடிப்படையில் மாஞ்சோலை மக்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து பேச நேரம் கேட்கப்பட்ட நிலையில், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை நெல்லையில் சந்தித்து மாஞ்சோலை மக்கள் விவகாரம் தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை மக்கள், திமுக, மதிமுக நிர்வாகிகளுடன் பாஜக சார்பில் அமைச்சரை சந்தித்து மாஞ்சோலை மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு முதல்வரிடம் பேசி தீர்ப்பின் அடிப்படையில் அனைத்தும் செய்துகொடுப்பதாக உறுதியளித்துள்ளனர் என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

