”5 வருசம் நான் தான் CM"வம்பிழுத்த சித்தராமையா! கோபத்தில் DK சிவக்குமார்
இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டும் தான் முதலமைச்சராக இருப்பேன் என யாரும் சொல்லவில்லை என சித்தராமையா பேசியிருப்பது டி.கே.சிவக்குமார் தரப்புக்கு கடும் கோபத்தை கொடுத்துள்ளது. கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி கைமாறுமா, இதில் ராகுல்காந்தி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடகாவில் 2023ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த போது சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. சீனியர் என்ற அடிப்படையில் சித்தராமையாவிடன் முதலமைச்சர் பதவியை ஒப்படைத்த காங்கிரஸ் தலைமை, டி.கே.சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தது. அப்போது 2 பேரும் ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து கொள்ளலாம் என டீல் போட்டு தான் தலைமை இந்த விஷயத்தை சரிகட்டியதாக பேச்சு அடிபட்டது.
சித்தராமையாவின் இரண்டரை ஆட்சி முடிந்துள்ள நிலையில் மீண்டும் அதிகார போட்டி ஆரம்பமாகிவிட்டது. டி.கே.சிவக்குமாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால் 5 ஆண்டுகள் நான் தான் முதலமைச்சராக இருப்பேன் என சித்தராமையா தொடர்ந்து சொல்லி வருகிறார். கர்நாடகாவுக்கு வந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சரிகட்டியதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் சட்டமன்றத்தில் பேசிய சித்தராமையா, ‘தற்போது நான் தான் முதலமைச்சராக இருக்கிறேன். 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்து மீண்டும் 2028ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும். காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் வரை நான் தான் முதலமைச்சராக இருப்பேன். இரண்டரை ஆட்சிகால ஆட்சி பற்றி நான் இதுவரை எதுவும் சொன்னதில்லை. அப்படி ஒரு ஒப்பந்தமே நாங்கள் போடவில்லை” என பதிலடி கொடுத்துள்ளார்.
சித்தராமையாவின் பேச்சு டி.கே.சிவக்குமாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் ஆத்திரத்தை கொடுத்துள்ளதாக சொல்கின்றனர். காங்கிரஸ் தலைமைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கும் போது, வேண்டுமென்றே வம்பிழுக்கும் வகையில் சித்தராமையா பேசியுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சித்தராமையா டெல்லி சென்று தலைமையை சந்திக்கவிருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.
இதுதொடர்பாக பேசிய டி.கே.சிவக்குமார், ‘காங்கிரஸ் தலைமை இருவரையும் ஒன்றாக தான் டெல்லிக்கு அழைப்பார்கள். அந்த அழைப்புக்காக காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் யார் என்பதில் மீண்டும் மோதல் வந்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமை நிலைமையை எப்படி சரிகட்டப் போகிறது என்ற கேள்வி வந்துள்ளது. ராகுல்காந்தி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.





















