Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்

அரசு ஊழியர்களின் கோரிக்கை
அரசின் சார்பாக மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் மக்களை சென்று சேர்வதற்கு அரசு ஊழியர்களின் பணி முக்கியமானது. எனவே அரசு ஊழியர்களுக்காக பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இருந்த போதும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்காக சரண் விடுப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். இதே போல மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன் தீப்சிங் பேடி தலைமையில் ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க குழு ஒன்றை அமைந்து உத்தரவிட்டார்.
பழைய ஓய்வூதிய திட்டம்
இந்த குழுவும் அரசு ஊழியர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கத்தோடு பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. மேலும் எல்ஐசி மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி இடைக்கால அறிக்கையை கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. இருந்த போதும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக ஆலோசிக்க அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது. அப்போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே பழைய ஓய்வூதிய திட்டம், அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. எனவே இந்த கோரிக்கைகள் செயல்படுத்த வலியுறுத்தி மீண்டும் போராட்டங்களை நடத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அரசு ஊழியர்கள் போராட்டம்
இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களை தமிழக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இன்று காலை காலை 10.00 மணி அளவில், சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான கோரிக்கை முக்கிய இடம் வகிக்கும்.
அமைச்சர்கள் குழு இன்று முக்கிய ஆலோசனை
எனவே இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தோடு ஆலோசனை நடத்தப்படும். அடுத்ததாக காலிப்பணியிடம் நிரப்புதல், ஊதிய உயர்வு தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் முக்கிய எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகள் தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும், ஜனவரி முதல் வாரம் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.





















