RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
RSS Mohan Bhagwat: இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் அளிக்காவிட்டாலும், இந்தியா இந்து நாடு தான் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

RSS Mohan Bhagwat: இந்தியா இந்து நாடு தான் என்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் அவசியமில்லை, என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இந்தியா ”இந்து நாடு” தான்..
இந்தியா இந்து நாடு தான் எனவும், அது உண்மை என்பதால் அதற்கு அரசியலமைப்பு சட்டத்தின் ஒப்புதல் அவசியமில்லை என்றும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது பேசுகையில், “இந்தியா தற்போது இருப்பதை போன்று எப்போதும் இந்து நாடாக தொடரும். நாட்டில் இந்திய கலாச்சாரம் கொண்டாடப்படும் வரையில், இந்த நிலை நீடிக்கும்” என வலியுறுத்தியுள்ளார்.
மோகன் பகவத் ஆவேசம்..
தொடர்ந்து பேசுகையில், “சூரியன் கிழக்கில் உதிக்கிறது. அது எப்போதிலிருந்து நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. எனவே, அதற்கும் அரசியலமைப்பு ஒப்புதல் தேவையா? இந்துஸ்தான் ஒரு இந்து தேசம். இந்தியாவை தங்கள் தாய்நாடாகக் கருதுபவர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பாராட்டுகிறார்கள், இந்துஸ்தான் நிலத்தில் இந்திய மூதாதையர்களின் மகிமையை நம்பும் மற்றும் போற்றும் ஒரு நபர் உயிருடன் இருக்கும் வரையிலும், இந்தியா ஒரு இந்து தேசம். இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம்.
நாடாளுமன்றம் எப்போதாவது அரசியலமைப்பைத் திருத்தி அந்த வார்த்தையைச் சேர்க்க முடிவு செய்தால், அவர்கள் அதைச் செய்தாலும் இல்லாவிட்டாலும், அது பரவாயில்லை. நாங்கள் இந்துக்கள், எங்கள் தேசம் ஒரு இந்து தேசம் என்பதால் அந்த வார்த்தையைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதுதான் உண்மை. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல" என மோகன் பகவத் பேசியுள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களா?
ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்துக்களின் பாதுகாப்பிற்காக போராடுகிறது, நாங்கள் தீவிர தேசியவாதிகள், ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று மோகன் பகவத் பேசியுள்ளார். அதன்படி, "நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து இருந்தால், நான் சொன்னது போல், ஆர்எஸ்எஸ் செயல்பாடு வெளிப்படையானது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம், அப்படி ஏதாவது நடப்பதை நீங்கள் பார்த்தால், உங்கள் கருத்துக்களை வைத்திருக்கலாம், நீங்கள் பார்க்கவில்லை என்றால் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள். ஆர்எஸ்எஸ் பற்றி புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை என்றால், உங்கள் மனதை யாராலும் மாற்ற முடியாது.
எங்களது நடவடிக்கைகளை பார்த்த பிறகு, நீங்கள் தீவிர தேசியவாதிகள் என்று மக்கள் கூறியுள்ளனர். நீங்கள் இந்துக்களை ஒழுங்கமைக்கிறீர்கள், மேலும் நீங்கள் இந்துக்களின் பாதுகாப்பிற்காக வாதிடுகிறீர்கள் என தெரிவித்துள்ளனர். ஆனால் நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல. பலர் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர், மேலும் மேலும் அறிய விரும்புபவர்கள் ஆர்எஸ்எஸ்ஸை தாங்களாகவே வந்து பார்க்க வேண்டும்," என்றும் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.





















