நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொடு உணர்வு பாதை திட்டம்; ஆட்சியரின் முயற்சிக்கு வரவேற்பு
”மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் வெளியே வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவர்களாலும் தனியாக சென்று வர முடியும் என்பதற்கு இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும்”
நெல்லை நீர்வளம், தாய்கேர் மையம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்சியாக பல முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் யாருடைய துணையும் இன்றி பொது இடங்களான ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், மருத்துவமனை, கோவில்கள், சுற்றுலாத்தலங்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களில் முக்கிய அலுவலர்கள் அறை மற்றும் கவுண்டர்களுக்கு செல்வதற்காக டேக்டையில் எனப்படும் தொடு உணர்வு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று நெல்லை மாவட்டத்தில் ஆட்சியரின் உத்தரவுப்படி பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வகையில் தொடு உணர்வு பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் இந்த தொடு உணர்வு பாதைகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. மேலும் தொடு உணர்வு பாதை அருகே அந்தந்த பகுதியின் உள்ள அலுவலர்களின் அறைகள் மற்றும் கவுண்டர்களில் பிரெய்லி எழுத்துக்களுடன் கூடிய அக்ரலிக் போர்டுகளும் வைக்கப்பட்டு மாவட்டத்தில் இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள் அந்தந்த அலுவலர்களின் அறைகளுக்கு எளிதாக செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தொடு உணர்வு பாதை அமைக்கும் தணேஷ் கனகராஜ் என்பவர் கூறும் பொழுது, நெல்லை மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் அதிகம் வரும் மாற்றுதிறனாளிகள் அலுவலகம், அவர்களுக்கான பயிற்சி மையம் ஆகிய இடத்தில் அமைக்கபட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் ஆகியோர் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். இன்னும் ஓர் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் வெளியே வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவர்களாலும் தனியாக சென்று வர முடியும் என்பதற்கு இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். ஆட்சியரின் இந்த முயற்சி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்