மாணவ மாணவிகள் நாளிதழ்களை படித்தால் அனுபவ அறிவு கிடைக்கும் - அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை
சிறுவன் ராஜேஷ் தந்தையில்லாமல் தாத்தா வளர்ப்பில் வளர்ந்த தான் ஐஏஎஸ் ஆக போகிறேன் என்று கையில் ஒரு காகிதம் இல்லாமல் அருமையாக பேசினான். இதே போல் அனைவரும் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான பாராட்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பொதுஅறிவை வளர்த்துக் கொண்டு படிப்போடு லட்சியத்தை எதிர்கொள்ள வேண்டும் என மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி சமூகபாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற இல்ல குழந்தைகளுக்கான பாராட்டு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் வரவேற்புரையாற்றினார். மாணவ மாணவிகள் ராஜலட்சுமி, ஜோ கென்சி, ராஜேஷ், ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து 29 பேருக்கு பரிசுகள் வழங்கி நினைவு பரிசுகள் வழங்கி பேசுகையில் "மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறியதற்கிணங்க நமது மாவட்டத்திலும் இதே போல் ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 400மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவ மாணவிகளும் உலகத்தில் நடப்பதை தெரிந்து கொள்ள நாளிதழ்கள் புத்தகங்கள் படிக்க வேண்டும். அதன் மூலம் நமக்கு பல அனுபவ அறிவுகள் கிடைக்கும் அதே அனுபவ அறிவு பெற்றவர்கள்தான் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.
படிப்பறிவோடு சேர்ந்து பொதுஅறிவையும் வளர்த்து கொண்டு லட்சியத்தை நிர்ணயித்து பயணிக்க வேண்டும். இங்குள்ள நீங்கள் பலர் தாய் தந்தையர்கள் இல்லாத நிலையில் படித்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளீர்கள் இதனால் இதில் உள்ள பல்வேறு இடர்பாடுகள் எல்லாவற்றையும் ஓரளவு கடந்து இருப்பீர்கள் 18வயது வரை பள்ளி படிப்பு பருவம். இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கு பேசிய சிறுவன் ராஜேஷ் தந்தையில்லாமல் தாத்தா வளர்ப்பில் வளர்ந்த நான் ஐஏஎஸ் ஆக போகிறேன் என்று கையில் ஒரு காகிதம் இல்லாமல் அருமையாக பேசினான். இதே போல் அனைவரும் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் தாய் தந்தையர் இருந்தும் பல குடும்பங்களில் வேலைக்கு செல்பவர்கள் இருப்பதால் இதுபோன்ற இல்லங்களில் தங்கி படிப்பவர்கள் உங்களை வழிநடத்துபவர்களாகிய தாய் தந்தையர்கள் ஆசிரியர்கள் சொல்படி கேட்டு படிக்க வேண்டும். அரசு சார்பில் உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கப்படும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் முடியாதது என்று எதுவும் இல்லை. அதை கடைப்பிடித்தால் உங்களது வாழ்வில் வசந்தகாலம்தான்” என்றார்.
விழாவில் சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் ரூபன் கிஷோர், வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, வக்கீல் அரசகுமார் உள்பட மாணவ மாணவிகள் அரசு சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக புனித மரியன்னை கருணை இல்ல இயக்குநர் அல்பட் சேவியர் நன்றியுரையாற்றினார்.