10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்
வேலையில்லாத இளைஞர்களுக்கு பனைத் தொழில் செய்ய பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய கூட்டம் பாளையங்கோட்டையில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர் சேர்க்கையை அவர் தொடங்கி வைத்து, பனையேறும் தொழிலாளர்களுக்கு நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித் தொகை ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, கடந்த 23ஆம் தேதி தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பனை நல வாரியம் செயல்படாமல் இருந்தது. 2006ல் உருவாக்கப்பட்ட இந்த வாரியம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் பனைத் தொழிலாளர் நல வாரியம் செயல்படாமல் போனது. 10 ஆண்டுகாலம் பனைத் தொழிலாளர் நல வாரியம் எந்த செயல்பாடும் இல்லாமல் இழுத்து மூடப்பட்டது. இதனால் பனையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதன் மூலம் கல்விக்கான உதவித் தொகை, பென்சன், திருமண உதவி என அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் மக்களை சென்று இதுவரை சேரவில்லை. பத்தாண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை நல வாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் காரியாண்டி பகுதியில் வயது முதிர்ந்த நபர் துரைப்பாண்டி என்பவர் பனைமரம் ஏறி தொழில் செய்து வருகிறார். குழந்தைகள் கைவிடப்பட்டு பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இந்த தொழிலை செய்து வரும் அவருக்கு பனை நல வாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பனைத் தொழிலாளர்களை கிராமமாக சந்தித்து நலவாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது காவல்துறை தேவை இல்லாமல் வழக்கு பதிவு செய்து வருகிறது. இதனை கைவிட வேண்டும். தமிழக டிஜிபி பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது வழக்கு போட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், வழக்கு போடும் செயலை காவல்துறை கைவிட வேண்டும். பதநீர் விற்பனை செய்ய பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பால் பூத்து போன்று புதிய அங்காடி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வேலையில்லாத இளைஞர்களுக்கு பனைத் தொழில் செய்வதற்கான பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுத்தமான கருப்பட்டி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பனை தொழிலாளர் நல வாரியம் மேற்கொள்ளும்.
தமிழக அரசு உத்தரவின் பேரில் ரேஷன் கடைகளில் பனைவெல்லம், கருப்பட்டி விற்பனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பனைத் தொழிலாளர் நல வாரியம் மூலம் ரேஷன் கடைகளில் பனை கருப்பட்டி விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். பனை மரத்திலிருந்து மதிப்பு கூட்டுப் பொருட்கள் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பனை மரங்களை வெட்டும் நபர்களைக் கண்டால் நேரடியாக பொதுமக்கள் போலீசார் இடம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளது. பனை நல வாரியத்தில் ஒரு லட்சம் நபர்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட இறுதியில் பத்தாயிரம் நபர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்