(Source: ECI/ABP News/ABP Majha)
மாஞ்சோலைக்கு கட்டணமின்றி செல்ல ஆட்சியர் உத்தரவிட்டும் பணம் கேட்ட வனத்துறை - நடுவழியில் தவித்த கிராம மக்கள்
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காமல் அத்துமீறி வனத்துறை செயல்படுவதாக மலைக்கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட மலை கிராமங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்த பெரும் மழையால் மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. மணிமுத்தாறு முதல் மலை கிராமங்களுக்கு செல்லும் பாதை வரை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் பெரு மழையால் உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று போனது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது. பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலை கிராமங்கள் குறித்து செய்தி வெளியிடப்பட்டதால் அது அரசின் கவனத்திற்கு சென்றது. இதனால் அங்கு நிவாரண பணிகளோடு தற்காலிகமாக சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் போக்குவரத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளையும் போக்குவரத்து கழகம் மேற்கொண்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த சாலையில் பேருந்துகள் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
ஆனால் பேருந்தின் சக்கரம் சிக்கி போக்குவரத்து செல்ல முடியாமல் மீண்டும் தடைபட்டது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் செல்ல முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும் வனத்துறை வாகனம் மூலம் பொதுமக்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் அதிக கட்டணம் வசூலிப்பதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு வனத்துறை வாகனத்தில் கட்டணமின்றி சென்று வருவதற்கு நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று காலையில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மலை கிராமங்களுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வனத்துறை வாகனம் புறப்பட்டது. அப்போது வனத்துறையின் வாகனத்திற்கு திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டீசல் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர். தொடர்ந்து வாகனம் இயக்கப்பட்டு மணிமுத்தாறு சோதனைச் சாவடிக்கு சென்றது.
அங்கு பயணி ஒருவருக்கு 150 முதல் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி வனத்துறையினர் வாகனத்தை அங்கேயே நிறுத்தினர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதோடு காலை உணவு கூட உண்ணாமல் வாகனத்திலேயே மலை கிராம மக்கள் காத்திருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காமல் அத்துமீறி வனத்துறை செயல்படுவதாக மலைக்கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து சிறிது நேரத்தில் பேருந்தில் பயணிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தின் அடிப்படையில் அவ்வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் கட்டணத்தை செலுத்தியது. இதனை அடுத்து சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த வாகனம் மலை கிராமங்களை நோக்கி புறப்பட்டு சென்றது. பெருமழையால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கி வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வாழ்வாதாரம் மேம்பட ஒத்துழைக்க வேண்டிய வனத்துறையை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் தனி அதிகாரத்தில் அத்துமீறி செயல்படுவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.