Nellai : இஸ்லாமியர்களே இல்லாத ஊரில் நல்லிணக்க விழா ? எடுத்துக்காட்டாக விளங்கும் கிராமம்...
"இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஜாதி மத வேறுபாடின்றி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தி வருவதால் இது சமூக நல்லிணக்க விழாவாக பார்க்கப்படுகிறது"
நெல்லை மாவட்டம் நாங்கு நேரி அருகே உள்ளது தெற்கு விஜய நாராயணம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள மேத்தா பிள்ளை அப்பா தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக இவ்விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. கொரோனா காரணமாக கடந்த ஓரிரு ஆண்டுகள் கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் இந்தாண்டு கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த கந்தூரி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாமிய முறைப்படி நடைபெறும் இக்கந்தூரி விழா இஸ்லாமியர்களே இல்லாத ஊரில் மத நல்லிணக்க விழாவாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்களை அவ்வூரில் உள்ள இந்துக்கள் தங்களது உறவினர்கள் போல் தங்களது வீடுகளில் தங்க வைத்து உபசரித்து மூன்று நாட்கள் இவ்விழாவை சிறப்பாக கொண்டாடுவர். அதன்படி நேற்று மேத்தா பிள்ளை அப்பா வாழ்ந்த வீட்டில் வைத்து துஆ ஓதி, குத்து விளக்கு ஏற்றி, வெற்றிலை பாக்கு, சந்தனம், குங்குமம் போன்றவற்றால் கொடிக் கம்பத்தை அலங்கரித்து அதில் கொடியை கட்டி நாதஸ்வரம் முழங்க எடுத்து வரப்பட்டது. அப்போது உள்ளூரை சேர்ந்த இந்துக்கள் கொடிக் கம்பத்திற்கு மாலை அணிவித்தும், புனித மஞ்சள் நீர் ஊற்றியும் மரியாதை செய்து வழிபட்டனர். பின்னர் முக்கிய தெருக்கள் வழியாக தர்காவிற்கு வந்த கொடி கம்பத்தை அங்குள்ள வேப்ப மரத்தின் உச்சியில் ஏற்றி வழிபட்டனர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து தர்காவில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றி பெண்கள் வழிபட்டனர். இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஜாதி மத வேறுபாடின்றி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தி வருவதால் இது சமூக நல்லிணக்க விழாவாக பார்க்கப்படுகிறது.
முன்னொரு காலத்தில் விஜய நாராயணம் பகுதியில் நவாபின் அரச பிரதி நிதியாக இருந்த இஸ்லாமியர் மேத்தாபிள்ளையும் அதே ஊரை சேர்ந்த மாடசாமியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அப்போது மேத்தாபிள்ளையையும் மாடசாமியின் சகோதரியையும் இணைத்து தவறாக கருத்து பரப்பப்பட்டதால் மாடசாமியின் குடும்பத்தினர் அப்பெண்ணை உயிருடன் புதைத்ததோடு மேத்தா பிள்ளையையும் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் குற்றமற்றவர்கள் என்பதை அறிந்த மாடசாமி மன வேதனை அடைந்ததோடு இஸ்லாமியர்களே இல்லாத அவ்வூரில் மேத்தா பிள்ளையை அடக்கம் செய்த இடத்தில் ஊரில் உள்ள இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய முறைப்படி தர்கா அமைத்து அவரை குடும்பத்துடன் வழிபட்டு வந்துள்ளனர். அதுவே ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக இந்துக்கள் - முஸ்லீம்கள் இணைந்து கொண்டாடப்பட்டு வருவதாக அவ்வூர் மக்களால் சொல்லப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர்கள் கூறும் பொழுது, ஆயிரம் வருடமாக நடைபெற்று வரும் இக்கந்தூரி விழாவிற்கு வெளி ஊர்களில் இருந்து இஸ்லாமியர்கள் வருவர். அவர்கள் எங்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுவதுண்டு. இந்த விழாவின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் இங்கு நடைபெறாது. அப்படி யாரேனும் தவறு செய்தால் அவர்கள் மறு வருடம் உயிருடன் இருப்பதில்லை, அந்த அளவிற்கு மேத்த பிள்ளையின் சக்தி இருப்பதை நாங்கள் நம்புகிறோம். அதே போல இங்கு ஆண் குழந்தை பிறந்தால் ”மேத்த பிள்ளை” என்றும் பெண் பிள்ளை பிறந்தால் மேத்தா என்றும் பெயர் வைப்பதுண்டு. இந்துக்கள் மட்டுமின்றி இங்குள்ள ஒரு தெருக்களில் வசிக்கும் கிறிஸ்தர்வர்களும் இவ்விழாவிற்கு வரும் இஸ்லாமியர்களை தங்க வைக்கின்றனர். எனவே தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு எங்கள் ஊர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது எங்களுக்கு பெருமையை தருகிறது என்றனர்.