Tirunelveli: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்.. இறந்த குழந்தை புதைப்பு.. நெல்லையை அதிரவைத்த கணவன்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வீட்டில் வைத்து தனிச்சையாக இயற்கையான முறையில் பிரசவம் பார்ப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் அப்படியான சம்பவத்தில் குழந்தை உயிரிழந்து விட்டது.

திருநெல்வேலி அருகே மனைவிக்கு மருத்துவர்களின் அறிவுரையை மீறி வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தை உயிரிழந்து விட்டது. அதனை யாருக்கும் தெரியாமல் புதைத்ததாக போலீசார் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது எனப் பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள தெற்கு தைக்கா தெருவில் லியாகத் அலி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு நசிர் உசேன் என்ற மகன் உள்ளார். இவர் கோவை மாவட்டத்தில் தொழில் செய்து வருகிறார். இந்த நசிர் உசேனுக்கு முகமது அஸ்மா என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் தற்போது தான் முகமது அஸ்மா கர்ப்பமாக இருந்துள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் முகமது அஸ்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நசிர் உசேன் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக வீட்டிலேயே சுகப் பிரசவம் பார்த்துள்ளார். ஆனால் வெளியே வந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நசிர் உசேன் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். எனினும் யாருக்கும் இந்த விஷயம் தெரிந்து விடாமல் இருக்க இரவோடு இரவாக அருகில் இருந்த காலி இடத்தில் குழந்தையின் உடலை புதைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை இந்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து மேலப்பாளையம் போலீசாருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நசிர் உசேன் வீட்டுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் செந்தில் தங்கதுரை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நசிர் உசேன் மனைவி முகமது அஸ்மத்துக்கு இயற்கையான முறையில் பிரசவம் பார்க்க முயற்சித்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிகழ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கர்ப்பிணிகள் கரு உருவான 3வது மாதத்தில் இருந்து முழுவதுமாக மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர்களுக்கான தடுப்பூசிகள், இரும்புச்சத்து மாத்திரைகள், மாதாந்திர ஸ்கேன் போன்றவை சரியாக நடைபெறுகிறதா என்பதை அந்த பகுதி செவிலியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
மேலும் வீட்டில் பிரசவம் பார்ப்பது தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பு வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை மேற்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்திருந்தும், இதுபோன்ற விஷயங்கள் நடைபெறுவது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.























