Jayakumar Case: பின் தங்கி செல்கிறதா ஜெயக்குமார் மரண வழக்கு.? - குற்றம் சாட்டும் நெல்லை காங்கிரசார்...!
ஜெயக்குமார் மரண வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு தக்க தண்டனையை அரசு வழங்க வேண்டும். இது போன்ற சம்பவம் காங்கிரசார் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை தருகிறது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மே இரண்டாம் தேதி காணாமல் போன நிலையில் நான்காம் தேதி அவரது உடல் அவரது தோட்டத்திலேயே பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உவரி காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கு அம்மாதம் (மே) 22ஆம் தேதி சி பி சி ஐ டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி வந்தனர். ஜெயக்குமாரின் மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு, எஸ்பி முத்தரசி உள்ளிட்டோர் நெல்லையில் முகாமிட்டு பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். அவர் எழுதியதாக குறிப்பிடப்பட்ட கடிதத்தில் இடம் பெற்ற முப்பதுக்கு மேற்பட்ட நபர்களிடமும் விசாரணை நடைபெற்றது. நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இருந்தும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது வரை இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற முடிவுக்கு சிபிசிஐடி காவல்துறையினர் வர முடியாத சூழல் உள்ளதாக தெரிகிறது. தற்போது விசாரணையின் நிலை என்ன என்பது குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில் இந்த வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பால்ராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். தொடர்ந்து இதுகுறித்து இரண்டு மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட பொருளாளர் பால்ராஜ் கூறுகையில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறந்து 60 நாட்கள் ஆகின்றது. இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள். அதன்பின்புலம் என்ன என்பது குறித்து விசாரணை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதுபற்றி எந்த தகவலும் தற்போது வரை இல்லை. ஒரு வேளை இந்த வழக்கு பின் தங்கி செல்கிறதா என்பது போல் தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு தக்க தண்டனையை அரசு வழங்க வேண்டும். இது போன்ற சம்பவம் காங்கிரசார் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை தருகிறது. அரசும், முதல்வரும் இந்த விசயத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என காத்திருக்கிறோம். இருப்பினும் காலதாமதாகிவிட்டது. நாங்கள் மட்டுமின்றி மக்களும் இந்த வழக்கு குறித்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றார். தொடர்ந்து சிபிஐ விசாரணை கோரிக்கை விருப்பீர்களா என்ற கேள்விக்கு அது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் பதிலளித்தார்.
அது போல நாங்கள் அளித்த மற்றொரு மனுவில், நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட களக்காடு நகராட்சி பேருந்து நிலையம் தற்போது களக்காடு நகராட்சி பேருந்து நிலையம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கு பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக தெரிய வருகிறது. அவ்வாறு பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஆட்சியரிடம் மனுவாக வழங்கப்பட்டுள்ளது. இதில் திரளான காங்கிரசார் கலந்து கொண்டனர்.