சங்கரன்கோவில்: விபத்தில் உயிரிழந்த தாய்! மகள்களின் படிப்புக்காக தந்தை செய்த நெகிழ்ச்சி காரியம்!
”ஆடு மேய்க்க சென்ற முத்துமாரி மீதும் ஆட்டின் மீதும் வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் முத்துமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்”
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காந்திநகர் 4 ஆம் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. தற்போது இவர் கக்கன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். தனியார் சமையல் எரிவாயு முகவாண்மையில் ஊழியராக பணி புரிந்து வரும் இவரது மனைவி முத்துமாரி (38). இவர்களுக்கு வாணீஸ்வரி, கலாராணி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது இருவரும் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். தாய் முத்துமாரி ஆடுகளை வீட்டில் வளர்த்து பராமரித்து வருவதோடு தனது இரு மகள்களும் பள்ளிக்கு சென்ற பின் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் அவர் கழுகுமலை சாலையிலுள்ள குப்பை கிடங்கு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகச் சென்ற கார் ஒன்று முத்துமாரி மீது மோதியதோடு அவர் மேய்த்து கொண்டிருந்த ஆடுகளின் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. கார் மோதிய விபத்தில் முத்துமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முத்துமாரி மேய்த்து கொண்டிருந்த ஆடு ஒன்று சம்பவ இடத்திலேயே பலியானது. மற்றொரு ஆட்டின் கால் முறிந்து படுகாயமடைந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முத்துமாரியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து ஒரு புறம் நடந்து தாய் உயிரிந்த நிலையில் நேற்று இறந்த முத்துமாரியின் மகள்கள் வாணீஸ்வரியும், கலாராணியும் பத்தாம் வகுப்பு தேர்வை எழுத இருந்தனர். இதனால் விபத்து நடந்ததை மகள்களுக்கு தெரியப்படுத்த கூடாது என முடிவு செய்த பெரியசாமி தனது இரு மகள்களும் கணிதத் தேர்வை அவர்கள் எழுத வேண்டும் என்பதற்காக இருவரையும் உறவினர் வீட்டில் தங்க வைத்தார். தனது தாய் இறந்தது தெரியாமல் நேற்று பத்தாம் வகுப்பு கணித தேர்வை எழுத இருவரும் அருகிலுள்ள நடுவக்குறிச்சி தனியார் பள்ளிக்கு உறவினர் வீட்டில் இருந்து சென்றனர். அவர்கள் இருவரும் தேர்வு நல்ல முறையில் எழுதியதை தொடர்ந்து இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். தாய் இறந்த செய்தி அறிந்ததும் இருவரும் கதறி அழுது கண்ணீருடன் வந்ததை பார்த்த அனைவரின் கண்களும் கலங்கியதோடு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மனைவியின் உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்த நிலையில் தனது மகள்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தேர்வு எழுத மகள்களை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தையின் செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.