நெல்லை குவாரி விபத்து: 30 மணி நேர போராட்டத்திற்கு பின் 5 வது நபர் சடலமாக மீட்பு
”குவாரி விபத்தில் மீட்கப்பட்ட 5பேரில் 2பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவரது உடலை மீட்கும் பணி நாளை தொடாங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்”
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல் குவாரியில் கடந்த 14 -தேதி இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர் குவாரிக்குள் சிக்கி கொண்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முருகன், விஜய் ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து பல மணி நேரம் உயிருக்காக போராடிய கிட்டாச்சி ஆப்பரேட்டர் செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நெல்லை மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை இரவில் லாரி கிளீனர் செல்வத்தின் உடல் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை ஐந்தாவது நபரின் உடல் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் விரைவு படுத்தப்பட்டது. ஆனால் பாறைகளுக்கு இடையில் அவரது உடல் சிக்கி இருப்பதால் உடலை மீட்க முடியவில்லை. நள்ளிரவு வரை நீண்ட மீட்பு போராட்டம் வெற்றி பெறவில்லை. இரவில் பாறைகளை அகற்றி உடலை கைப்பற்ற முயற்சித்த நிலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட தொடங்கியது. இதன் காரணமாக மீட்புப்பணிகள் இரவு 11:30 மணியளவில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக மீட்பு பணி காலை 11.30 மணிக்கு மேல் துவங்கியது. மண்ணியல் நிபுணர்கள் சுரங்கத்துறை வல்லுநர்கள் என அனுபவிக்க நபர்கள் காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினருடன் ஆலோசனை செய்த நிலையில் பாறையில் துளையிட்டு வெடி மருந்துகளை வைத்து தகர்த்து உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 20 ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டது. மேலும் பாறையில் துளையிடும் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டு 10 குச்சி வெடிமருந்துகள் செலுத்தப்பட்டது. மீட்பு பணிகளில் ஈடுபடும் நபர்கள் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி கொள்ள பாறை தகர்க்கப்பட்டது. இதனையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது,
நேற்று காலையே உடல் அடையாளம் கண்ட நிலையில் 30 மணி நேரத்தை கடந்தும் 5 வது நபரை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று 6.45 மணி அளவில் உடல் மீட்கப்பட்டது, மீட்கப்பட்ட நபரின் உடையில் இருந்து எடுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம், மணிபர்ஸ் அவர் அணிந்திருந்த உடை இவற்றை கொண்டு அவரின் உறவினர்கள் சடலமாக மீட்கப்பட்டவர் செல்வகுமார் என அடையாளம் கண்டறிந்தனர். மேலும் செல்வகுமாரின் சகோதரர் மாதவனும் மீட்கப்பட்ட சடலம் செல்வகுமாரின் உடல் தான் என உறுதி செய்தார், இதனை தொடர்ந்து செல்வகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்குவாரியில் சிக்கி இருக்கும் 6 வது நபரான ராஜேந்திரனின் உடலை மீட்கும் பணி நாளை காலை தொடங்கும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்,