Fathers Day: அன்புள்ள அப்பாக்களுக்கான நாள்.... தந்தையர் தினத்துக்கு அடித்தளமிட்ட அமெரிக்க சிறுமி பற்றி தெரியுமா?
தந்தையர் தினம் முதலில் எவ்வாறு தோன்றியது என ஆராய்ந்தால், அதன் வேர்கள் அமெரிக்க போர் வீரர் ஒருவரது மகளின் நியாயமான சிந்தனையில் அடங்கியுள்ளது.
தந்தையர் தினம். ஒரு தந்தை தனது குழந்தைகளிடம் காட்டும் பேரன்பு, வாழ்வின் அனைத்து படிகளிலும் வழங்கும் அறிவுரைகள், குழந்தைகளுக்காக செய்யும் தியாகங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறு
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (ஜூன் 19) தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினம் போல் தந்தையர் தினத்துக்கு நீண்ட நெடிய வரலாறு இல்லை என்ற போதும், தந்தை மற்றும் தந்தை இடத்தில் நம் வாழ்வில் இருப்பவர்களை ஆண்டில் இந்த ஒரு நாளில் கொண்டாடித் தீர்ப்பதற்காக தந்தையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும், சமீபத்திய ஆண்டுகளாக உலக மக்களிடம் பெரும் பிணைப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நாளின் வரலாறு குறித்து தெரிந்து கொள்வோம்.
தந்தையர் தினத்துக்கு வித்திட்ட அமெரிக்க சிறுமி
1910ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் தந்தையர் தினம், உலகின் அனைத்து மரபுகள் மற்றும் பிராந்தியங்களிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தந்தையர் தினம் முதலில் எவ்வாறு தோன்றியது என ஆராய்ந்தால், அதன் வேர்கள் அமெரிக்க போர் வீரர் ஒருவரது மகளின் நியாயமான சிந்தனையில் அடங்கியுள்ளது.
அமெரிக்க போர் வீரரான வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்டின் மகள் சோனோரா. வாஷிங்டனில் உள்ள ஸ்போகேனில் வசித்து வந்த சோனோராவின் தாய், தனது ஆறாவது குழந்தையை பெற்றெடுத்தபோது உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, சோனோரா தான் தனது இளைய சகோதரர்களை தனது தந்தையுடன் இணைந்து வளர்த்து வந்துள்ளார்.
போர் வீரராக இருந்து கொண்டு தனது தந்தை, தான் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளுக்காகவும் செய்யும் தியாகங்களைப் பார்த்து வளர்ந்த சோனாரா, அன்னையர் தினம் குறித்த பிரசங்கம் ஒன்றை உள்ளூர் தேவாலயம் ஒன்றில் கேட்டுள்ளார்.
தேவாலயத்தில் கோரிக்கை
அப்போது, தனது தந்தை போன்ற உலகின் அனைத்து அப்பாக்களுக்கும் அங்கீகாரம் தேவை என்பதை உணர்ந்து, அங்கிருந்த பாதிரியார்கள் சபையை அணுகி, உலகம் முழுவதும் உள்ள தந்தையர்களை கௌரவிக்கும் வகையில் ஸ்மார்ட்டின் பிறந்தநாளான ஜூன் 5ஆம் தேதியை தந்தையர் தினமாக அங்கீகரிக்கும்படி கோரியுள்ளார்.
எனினும், சோனாராவின் தந்தை ஸ்மார்ட்டின் பிறந்த நாளுக்கு பதிலாக, அம்மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக பாதிரியார் சபை அறிவித்தது. அன்று தொடங்கி உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தந்தையர் தினம் பரவி விரிந்தது.
முன்னாள் அமெரிக்க சனாதிபதி லிண்டன் பி.ஜான்சன் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறை அதிகாரப்பூர்வமாக நாட்டில் தந்தையர் தினமாக அறிவித்து பிரகடனம் செய்தார். அன்று தொடங்கி தற்போது உலகம் முழுவதும் உள்ள தந்தையர்களை கௌரவிக்கும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தந்தையர் தினம்
உலகின் பல பகுதிகளிலும் தந்தையர் தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியா இந்நாளை இன்னும் பெரிதாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் நாட்டின் மெட்ரோ நகரங்கள் தந்தையர்கள் தினத்தை சிறப்பாகவே கொண்டாடி வருகின்றன. அனைத்து மனிதர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய இந்நாள் விரைவில் இந்தியாவிலும் பெரிய அளவில் கொண்டாடப்படும் என எண்ணுவோம்!