மேலும் அறிய
Advertisement
குறுங்காடாக மாறும் குப்பை மேடு...! மகிழ்ச்சியில் நீடாமங்கலம் மக்கள்...!
இங்கு குப்பைகளுடன், கோழி இறைச்சி கழிவுகள், கொட்டப்பட்டு உடனுக்குடன் தீ வைத்து எரித்தும் வந்தனர். இதிலிருந்து வரும் புகையால் பொதுமக்கள், ரயில் பயணிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு அடைந்தனர்.
குப்பை மேடாக இருந்த இடத்தை குறுங்காடாக மாற்றிய தன்னார்வ அமைப்பினர்.
கிரீன் நீடா, எக்ஸ்னோரா, இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியோரின் முயற்சியால் நீடாமங்கலத்தில் குப்பை மேடு குறுங்காடாக மாற்றும் முயற்சியை கண்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே 25 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் சுமார் ஒரு ஏக்கர் அறநிலையத்துறைக்கும், மீதி ரயில்வே துறைக்கும் சொந்தமானது. இந்த இடத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது என்றும் இடத்தை தூய்மை செய்து தருமாறும் இரு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நீடாமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பல ஆண்டுகளாக கடிதம் எழுதி வந்தனர்.
இங்கு குப்பைகளுடன், கோழி இறைச்சி கழிவுகள், மீன் இறைச்சி கழிவுகளும் கொட்டப்பட்டு உடனுக்குடன் தீ வைத்து எரித்தும் வந்தனர். இதிலிருந்து வரும் துர்நாற்றம், புகையால் பொதுமக்கள், ரயில் பயணிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு அடைந்தனர். இந்நிலையில் கிரீன் நீடா அமைப்பினர் அறநிலையத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மரங்கள் வளர்க்க அனுமதி கேட்டனர். அனுமதி கிடைத்த உடனே எக்ஸ்னோரா, இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஜெசிபி இயந்திரம் கொண்டு இடத்தை தூய்மை செய்து கருங்கல் நட்டு முள் கம்பி வேலி அமைத்தனர். 3000 குழிகள் தோண்டப்பட்டு அத்தி, நாவல், இலுப்பை, கொடுக்காபுளி, நீர் மருது, வில்வம், சில்வர் ஓக், செம்மரம், ரோஸ் வுட், பூவரசு, தேக்கு, மகோகனி, பலா உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட 3000 மரக்கன்றுகள் நடப்பட்டது.
3000 மரக்கன்றுகளுக்கும் தங்குதடையின்றி தினந்தோறும் தண்ணீர் பாய்ச்ச வசதியாக 5 இடங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை மன்னார்குடி எம்எல்ஏ முனைவர் டி.ஆர்.பி.ராஜா, அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, முன்னாள் எம்எல்ஏ பி.ராஜமாணிக்கம், எக்ஸ்னோரா தலைவர் எஸ்.செந்தூர் பாரி, உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர். பூண்டி புஷ்பம் கல்லூரி, மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணி மாணவ, மாணவிகளும் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினர். ஏற்பாடுகளை கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, உள்ளிட்ட கிரீன் நீடா அமைப்பை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இது குறித்து கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறுகையில்... கிரீன் நீடா அமைப்பு மூலம் இதுவரை 5 குறுங்காடுகளை உருவாக்கி 2500 மரங்களை வளர்த்துள்ளோம். நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகேயுள்ள கிரீன் நீடா ஆறாவது குறுங்காட்டில் 3000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். நம் வனப்பரப்பை 33 சதவீதமாக விரைந்து உயர்த்த வேண்டும் என்பதற்காக குறுங்காடுகளில் அதிக எண்ணிக்கையிலான மரங்களை நட்டு வளர்க்கிறோம் என்றார்.
இது குறித்து நீடாமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில்... நீடாமங்கலம் ரயில்வே ஸ்டேசன் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பார்கள், இந்த புகை முழுவதும் காற்றில் பரவி எங்கள் வீடுகள் முழுவதும் பரவி மூச்சு விடவே சிரமப்பட்டோம். மேலும் இந்த பகுதியில் வசிக்கும் சிறிய குழந்தைகள், மற்றும் முதியவர்களுக்கு மூச்சு விடுதல், மற்றும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வந்தது. ஈக்கள் தொல்லை அதிகமாக இருக்கும். இவ்வழியே செல்லும் போது மூக்கை பிடித்துக்கொண்டே செல்வோம் அவ்வளவு நாற்றமடிக்கும். தற்போது கிரீன் நீடா அமைப்பினர் ஒரு பகுதி இடத்தை மட்டும் தூய்மை செய்து மரக்கன்றினை வளர்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மரங்கள் வளர்க்கும் பகுதிக்கு அருகிலேயே மற்றொரு பகுதியில் குப்பைகள் தொடர்ந்து கொட்டுகின்றனர், செப்டிங் டேங் கழிவுகளையும் கொட்டுகின்றனர். இதனையும் தடுத்து நிறுத்த அதிகாரிகள் எங்களுக்கு உதவ வேண்டும் அப்படி செய்தால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் கொட்டாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion