மயிலாடுதுறை: முடங்கிய பிரம்புத்தொழிலால் வேலையிழப்பு : கொரோனாவால் முடங்கிய கிராமத்தின் வாழ்வாதாரம்!
சீர்காழி அருகே கொரோனா ஊரடங்கு உத்தரவால், பாரம்பரியம் மிக்க தைக்கால் பிரம்பு பொருட்கள் உற்பத்தி முடங்கியதால், கிராமம் முழுவதும் 5000 மேற்பட்டோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பெரும் இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அனைத்து துறைகளையும் ஆட்டிப்படைத்து, வேலைவாய்ப்பு இன்மையை ஏற்படுத்தி பலரது வாழ்வையும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளும் சில தளர்வுகளும் அளித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பலதரப்பட்ட நபர்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாக பாரம்பரிய பிரம்பு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. முதலில் சாதாரண குடிசை தொழிலாக தொடங்கிய பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தற்போது இரண்டு கி.மீ தூரம் சாலை இருபுறமும் 200-க்கும் மேற்பட்ட உற்பத்தி கூடங்களும், விற்பனையகங்களும் இயங்கி வருகிறது.
இங்கு தயாரிக்கபடும் பிரம்பு பொருட்கள் புவிசார் குறியீடு பெரும் அளவு பாரம்பரியமும், தரமும் வாய்ந்தது. இதனால், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரம்பு பொருட்களான நாற்காலி, ஊஞ்சல், சோபா செட், அலமாரி, குழந்தைகள் தொட்டில் மற்றும் மிகுந்த கலைநயம் மிக்க கைவினை பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பிரம்பு பொருட்கள் ஊற்பத்தி தொழிலை நம்பி தைக்கால், சாமியம், ஆணைக்காரன் சத்திரம், கோபாலசமுத்திரம், சியலாம், பெரம்பூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தைக்கால் பிரம்பு பொருட்கள் உற்பத்தி முற்றிலும் முடங்கியது. இதனால் இத்தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்த சுமார் 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டும் உற்பத்தி செய்த பொருட்ளை முழுமையாக விற்பனைசெய்ய முடியாத நிலையில் தற்போதை ஊரடங்கு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளே அதிகம் பிரம்பு பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம்.
கடந்த கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் தாக்கம் குறைந்து சுற்றுலாவும், ஆன்மீக தலங்களும் முழு பயன்பாட்டுக்கு வராத நிலையில் இரண்டாம் அலையால் இவர்களின் வாழ்க்கை கோள்விக்குறியாகியுள்ளது. கிராமத்தில் இருபுறமும் பிரம்பு பொருட்களால் போர்த்தியதுபோல் காட்சியளித்த தைக்கால் கிராமம் தற்போதை ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இப்பகுதி தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தங்கள் தொழிலுக்கும் சிறிய தளர்வுகள் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.