எதிர்பார்ப்பு இல்லாமல் தன் கருத்தை தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்: வைத்திலிங்கம் கருத்து
அனைத்து தொண்டர்களின் எண்ணத்தையே வெளிப்படுத்தி உள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்தையே செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதனை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் நன்மதிப்பைப் பெற்றவர் செங்கோட்டையன். அவர் இன்று அ.தி.மு.க. வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார். அனைத்து தொண்டர்களின் எண்ணத்தையே வெளிப்படுத்தி உள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர முடியும்.
ஒன்றிணைப்பு குழு என்பது குறித்து எனக்கு இன்றைக்கு தான் தெரிய வந்துள்ளது. எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை. அவர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளார். அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அவருடைய எண்ணம் போல் எல்லா தொண்டர்களும் விரும்புகிறார்கள். நிச்சயமாக எல்லோரும் அதை வரவேற்பார்கள்.
10 நாள் கெடு கொடுத்திருக்கார். இல்லை என்றால் இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவார் என்பது அர்த்தம். பத்து நாள் கெடு முடிந்தவுடன் எனது கருத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறார்கள். அ.தி.மு.க மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அதை இணைப்பதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள். சசிகலாவை சந்தித்து செங்கோட்டையன் பேசினாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவுகிறது. எம்ஜிஆர் கட்சி தொடங்கியது முதலே அதிமுகவில் இருந்து வரும் செங்கோட்டையன், ஜெயலலிதா தலைமையிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார். அவர் இன்று தனது மனதில் உள்ளதை தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். அதன்படி இன்று காலை நிருபர்களிடம் அவர் கூறுகையில், அம்மா மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்துவிடக் கூடாது என்று சசிகலா அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டோம். அதன்பிறகு தலைமைகள் மாறின. அன்று கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சில முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயம். பல்வேறு சோதனையான தருணங்களில் கட்சிக்காக பெரும் பங்காற்றியிருக்கிறேன். கட்சியின் நலனுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறேன்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எனக்கு இரண்டு முறை முக்கியமான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், கட்சியின் நலன் கருதி, கட்சி உடைந்துவிடக்கூடாது என்று பல தியாகங்களைச் செய்திருக்கிறேன். அதிமுகவின் மூத்த தலைவர்கள் 6 பேர் சந்தித்து என்னிடம் பேசினார்கள். பதவிகள் பொறுப்புகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் முக்கியமல்ல. அதிமுக ஒன்றிணைந்து வெற்றிபெற வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. 'மறப்போம் மன்னிப்போம்' என்ற அடிப்படையில் கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பு என்பது இந்த நேரத்தில் முக்கியம்.
அதுதான் அதிமுக தொண்டர்களின் விருப்பம். விரைந்து இதைச் செய்ய வேண்டும். 10 நாள்களில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். இது நடந்தால்தான் தேர்தல் பணிகளில் பங்காற்றுவேன். பிரிந்தவர்களை ஒன்று சேர்த்தால்தான் வெற்றிபெற முடியும். அதிமுக ஒருங்கிணைந்தால்தான் நான் முழுமையாக இறங்கி வெற்றிக்காகப் பணியாற்றுவேன்.
இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்" என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதை மையமாக வைத்துப் பேசியிருந்தார் செங்கோட்டையன் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















