தேசியக்கொடி ஏற்றவிருந்த கம்பத்தை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் - திருவாரூரில் அதிர்ச்சி
திருவாரூர் அருகே புலிவலம் தாமரைகுளத்தின் அருகில் புதியதாக கொடிமேடை மற்றும் கொடிகம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கட்டப்பட்டிருந்த தேசியகொடி கம்பம் மற்றும் கொடிமேடை உடைத்து தரைமட்டமாகி இருந்தது.
நாடு முழுவதும் இன்று 76 வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் 75வது சுதந்திர தினம் கடந்த ஒரு வருட காலமாக அமுதப் பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசின் அலுவலகங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில அரசின் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியினை ஏற்றி 75வது சுதந்திர விழா அமுதப் பெருவிழாவை கொண்டாட வேண்டும் என மத்திய அரசின் சார்பில் அறிவுறித்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு இல்லம் தோறும் தேசியக்கொடி என்கிற அறிவிப்பை வெளியிட்டு அதனை நிறைவேற்ற மக்களிடம் அறிவிப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்தனர். மேலும் 75 ஆவது சுதந்திர தினம் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுதல் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக்கொடி ஏற்றுதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
குறிப்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அம்ரித்சரோவர் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 75 குளங்கள் புதிதாக அமைக்கப்பட்டு அந்த குளத்தின் ஓரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கொடி மேடை மற்றும் தேசிய கொடி கம்பம் அமைத்து 76 ஆவது சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் அம்ரித்சரோவர் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 75 குளங்கள் அமைக்கப்பட்டு அனைத்து குளங்களின் ஓரங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கொடி மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருவாரூர் அருகே புலிவலம் தாமரை குளத்தின் அருகில் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் புதியதாக கொடிமேடை மற்றும் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை கொடியேற்றுவதற்காக அந்த பகுதிக்குச் சென்ற அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று பார்த்த பொழுது அங்கு கட்டப்பட்டிருந்த தேசிய கொடி கம்பம் மற்றும் கொடி மேடை உடைத்து தரைமட்டமாகி இருந்தது. இதனை கண்டு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனையடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு அரசு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ள காரணத்தினால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தின விழாவிற்காக கட்டப்பட்ட கொடி கம்பம் மற்றும் கொடி மேடை உடைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்