புதிய பிரேக் ஷூ மாற்றியதாக கூறி பணம் வசூல்; மாருதி சுசுகி சர்வீஸ் நிறுவனம் மீது புகார்
பழைய பிரேக் ஷூவை மாற்றாமலேயே புதியதாக மாற்றியதாக கூறி பணமும் பெற்றுக் கொண்டு இப்படி ஏன் செய்தீர்கள்?எங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு எனக் கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட நரசிங்கம்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருக்கு வயது 65. இவருக்கு சொந்தமாக மாருதி கார் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி அவரது காரை சர்வீஸ் செய்வதற்காக திருவாரூர் நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில் உள்ள மாருதி சுசுகி சர்வீஸ் சென்டரில் தனது காரை சர்வீஸிற்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் சர்வீஸுக்கான தொகை 11,323 ரூபாய் பணத்தையும் மாருதி சுசுகி சர்வீஸ் சென்டரில் அவர் செலுத்தியுள்ளார். அதனை அடுத்து அவருடைய காரில் அவர் மகன் மற்றும் குடும்பத்தினர் சென்னைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது மயிலாடுதுறையில் வாகனம் பழுதடைந்து நின்றுள்ளது. அதனையடுத்து மயிலாடுதுறையில் உள்ள மாருதி சுசுகி சர்வீஸ் சென்டரில் காரை பழுதுபார்க்க எடுத்துச் சென்ற பொழுது சிறிய பிரச்சனை தான் ஒன்றும் இல்லை எனக் கூறி உடனடியாக சர்வீஸ் செய்து கொடுத்து அவர்களை அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் கார் பழுதடைந்துள்ளது. அதனையடுத்து காரை எடுத்துக் கொண்டு திருவாரூரில் உள்ள மாருதி சுசுகி சர்வீஸ் சென்டருக்கு கோபாலகிருஷ்ணனின் மகன் பாலமுருகன் எடுத்துச் சென்றுள்ளார். அப்பொழுது காரின் முன்பக்க டயரை பிரித்துப் பார்க்கும் பொழுது பிரேக் ஷூ மாற்றப்படாமல் இருந்துள்ளது. அதனை அடுத்து சர்வீஸ் சென்டரின் மேலாளரிடம் இது குறித்து கேட்ட பொழுது தற்பொழுது புதிய பிரேக் ஷூவை மாற்றி கொடுத்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார். அதனை அடுத்து பாலமுருகன் மற்றும் அவருடைய நண்பர்கள் மாருதி சுசுகி சர்வீஸ் சென்டர் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழைய பிரேக் ஷூவை மாற்றாமலேயே புதியதாக மாற்றியதாக கூறி பணமும் பெற்றுக் கொண்டு இப்படி ஏன் செய்தீர்கள்?எங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு எனக் கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பாலமுருகன் கூறுகையில், “என்னுடைய தந்தை வாகனம் பழுதடைந்த நிலையில் மாருதி சுசுகி சர்வீஸ் சென்டரில் 11 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்து வாகனத்தை சரி செய்து எடுத்துச் சென்றேன். நான் வாகனம் சரி செய்ததில் இருந்து இதுவரை 2000 கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டியுள்ளேன். இதற்கு இடையில் இரண்டு முறை பழுதாகி எனது வாகனம் விபத்திலிருந்து தப்பித்துள்ளது. தற்போது மீண்டும் எனது வாகனத்தை மாருதி சுசுகி சர்வீஸ் சென்டருக்கு எடுத்து வந்து பார்க்கும் பொழுது பிரேக் ஷூ மாற்றப்படாமலேயே இருந்தது தெரிய வந்துள்ளது. சுசுகி சர்வீஸ் மேலாளர் அவர்களிடம் கேட்டதற்கு இதை பெரிதாக்க வேண்டாம் நான் புதிதாக மாற்றி கொடுத்து விடுகிறேன் எனக்கு கூறுகிறார். எங்களது உயிருக்கு ஏதாவது ஆகி இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. ஆகவே இது சம்பந்தமாக நாங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார். இது சம்பந்தமாக மாருதி சுசுகி சர்வீஸ் சென்டரின் மேலாளர் ராஜ்மோகன் அவர்களிடம் கேட்டதற்கு, “நாங்கள் புதிய பிரேக் ஷூ மாற்றி கொடுத்து விட்டோம் இவர்கள் வெளியில் எங்கு சர்வீஸ் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை ஆகையால் அங்கு இந்த பிரேக் ஷூ மாற்றப்பட்டதா என்று தெரியவில்லை” எனக் கூறினார்.