தஞ்சை ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக மசாஜ் கருவி அறிமுகம்
தஞ்சை ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்திற்கே மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்திற்கே மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் அம்ரிபாரத் திட்டத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் தற்காலிக பயணச்சீட்டு வழங்கும் மையம் மூடப்பட்டுள்ளது. புதிய வசதியாக பயணிகளுக்காக எலக்ட்ரானிக் மசாஜ் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை ரயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரயில் நிலையங்களுள் ஒன்று. திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையம் தஞ்சாவூர் ரயில் நிலையம்தான். சுற்றுப்பகுதிகளில் அதிக கிராமங்கள் என்பதால் அனைத்து பயணிகளும் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். தஞ்சை வழியாக வாரணாசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மைசூர், கோயம்புத்தூர், செங்கோட்டை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பயணிகள் ரயில்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லவும் தஞ்சை வழியாகத்தான் முன்பு செல்ல வேண்டும். நாளடைவில் விழுப்புரம்-திருச்சி இடையே ரயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான ரயில்கள் அந்த வழியாக திருப்பி விடப்பட்டன. திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருமானமும் தஞ்சை ரெயில் நிலையத்தில் தான் வருகிறது.
கடந்த 2022-2023-ம் ஆண்டில் மட்டும் தஞ்சை ரயில் நிலையத்தில் ரூ.43.16 கோடி டிக்கெட் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. 36 லட்சம் பணிகள் வந்து சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தஞ்சை ரயில் நிலையத்தில் அம்ரிபாரத் திடடத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. முதல்கட்டமாக சுரங்கப்பாதையில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2வது நடைமேடையில் உள்ள தண்டவாளங்கள் அகற்றப்பட்டு பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.
ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நுழைவு வாயில் மூடப்பட்டு, சரக்கு வாகனங்கள் செல்லும் வழியாக பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நுழைவு வாயில் கட்டிடத்தில் இருந்த தூண்கள் இடிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணிகள் சரக்கு வாகனங்கள் செல்லும் வழியாக உள்ளே நுழையும் இடத்தில் தற்காலிக பயணச்சீட்டு வழங்குவதற்காக புதிய மையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த கட்டிடத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அந்த மையமும் மூடப்பட்டது. அதே கட்டிடத்தின் முன்பகுதியில் இயங்கி வந்த டிக்கெட் முன்பதிவு மையங்களும், அதற்கு நேர் எதிரே இருந்த கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடத்தில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. பின்னர் எதிர்பகுதியில் இருந்த கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு நாடு முழுவதும் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி 508ல் தஞ்சை ரயில் நிலையமும் ஒன்று. தஞ்சை ரயில் நிலையத்துக்கு வரும் பயனாளிகளுக்கு வசதியாக எலக்ட்ரானிக் மசாஜ் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் 3 மசாஜ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர கால்களுக்கு மட்டும் மசாஜ் செய்வதற்காக தனி எலக்ட்ரானிக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. மசாஜ் செய்வதற்கு 5 நிமிடத்திற்கு ஒருவருக்கு ரூ.50ம், முழு உடல் மசாஜ் செய்வதற்கு 15 நிமிடங்களுக்கு ஒரு நபருக்கு ரூ.130ம் கட்டணம் செலுத்த வேண்டும். இதே போல் காலுக்கு மட்டும் மசாஜ் செய்வதற்கு 5 நிமிடத்திற்கு ரூ.30qம், 10 நிமிடத்திற்கு ரூ.60 ஒரு நபருக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மசாஜ் செய்ய விரும்பும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இதில் கர்ப்பணிகளுக்கும், கருத்தரிக்கும் கட்டத்தில் இருப்பவர்களுக்கும் அனுமதி கிடையாது. இதய பிரச்சினை உள்ளவர்கள், எலும்புகளுக்கு நிலையான தட்டுகளை வைத்திருப்பவர்களுக்கும் அனுமதி கிடையாது. மது அருந்தியவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலணிகள் அணிந்து இதனை பயன்படுத்தக்கூடாது. கடிகாரம், வளையல்கள், முடி கிளிப்புகள் போன்ற ஆபரணங்களை அகற்றி விட்டு இதில் மசாஜ் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் இந்த மசாஜ் கருவியை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் கட்டணத்தை பெற்றுக்கொண்டு, தாங்கள் எவ்வளவு நிமிடம் மசாஜ் செய்ய விரும்புகிறார்களோ? அதனை அங்கிருக்கும் கருவியில் ஆன் செய்து விடுவார். அதன்படி மசாஜ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.