உலோகத்திலும் சோழர்கால சிற்பக்கலை மிகவும் சிறப்பானது... கலையம்சம் நிறைந்தது
கல்லில், மண்ணில் மட்டுமல்ல... உலோகத்திலும் சோழர்கால சிற்பக்கலை மிகவும் சிறப்பான ஒன்றாகும். பழங்காலத்தில் தமிழக சிற்பக்கலையை மூன்று காலங்களாக பிரிக்கலாம்.
தஞ்சாவூர்: கல்லில், மண்ணில் மட்டுமல்ல... உலோகத்திலும் சோழர்கால சிற்பக்கலை மிகவும் சிறப்பான ஒன்றாகும். பழங்காலத்தில் தமிழக சிற்பக்கலையை மூன்று காலங்களாக பிரிக்கலாம். சோழர், பாண்டியர், பல்லவர்கால சிற்பக்கலை என வகைப்படுத்தலாம். மதுரையும் அதைச் சுற்றியுள்ள கோயில்களில் அமைந்த சிற்பங்கள் பாண்டியர் சிற்பக்கலை, பல்லவ கால சிற்பக்கலை என்பது மாமல்லபுரம் சிற்பக்கலை வடிவங்களைச் சார்ந்ததாகும்.
சோழர்கால சிற்பக்கலை என்பது தஞ்சை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் உள்ள கோயில்களும், சிற்பங்களும் ஆகும். இதில் சோழர்கால சிற்பக்கலை மிகவும் சிறப்புற்று விளங்குகிறது. சிற்பங்களின் அளவு, உருவ அமைப்பிலும் சோழர்கால பாணி என்பது இன்றளவும் கலை பிரியர்களால் புகழ்ந்து பாராட்டப்படுகிறது. பஞ்சலோக சிற்பங்கள் என்றால் உலகப் புகழ்பெற்ற பெருமைமிகு இடமாக கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை விளங்குகிறது. இப்பகுதியில் வாழும் சிற்பிகள் சோழர்கால பரம்பரை சிற்பிகள் வழி வந்தவர்கள்.
மாமன்னன் ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலை பல ஊர்களில் இருந்து சிற்பிகளை அழைத்து வந்து கட்டினார். பிறகு தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் கோயிலை இச்சிற்பிகளை கொண்டே கட்டினார். பிறகு சுவாமிமலை கோயிலில் திருப்பணிக்காக சிற்பிகள் அப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். திருப்பணியை முடித்தபின், காவிரி ஆற்றுப்படுகையில் கிடைக்கின்ற வண்டல் மண், பஞ்சலோக சிற்பங்கள் செய்வதற்கு ஏற்ற மண்ணாக அமைந்தமையால் சில குடும்பத்தினர் அங்கேயே தங்கிவிட்டனர்.
கல்வேலை, மரவேலை, பஞ்சலோக வேலை, கோயில் கட்டுமான வேலைகளையும் சிற்பிகள் அறிந்திருந்தனர். சுவாமிமலை மண்பதம் பஞ்சலோக சிற்பங்கள் செய்ய ஏற்றதாக பஞ்சலோக சிற்பங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர்.
பொதுவாக பஞ்சலோக சிற்பங்களுக்கு அதன் ஆபரணம், நகாசுவேலை மற்றும் அமைப்பு மிகவும் முக்கியமானது. இவைகளில் முக அமைப்பு என்பது ஒருவரின் கையெழுத்து எப்படி அமைகிறதோ அதேபோன்றுதான் சிற்பிகள் வடிக்கும் முக அமைப்பு. சில முக அமைப்பு கோபமாகவும், சாந்தமாகவும் அமைவது இதன் அடிப்படையாக என்று கூறலாம்.
இத்தொழிலை பாரம்பரிய முறைப்படி தான் செய்ய முடியுமே தவிர புதிய முறையில் செய்ய முடிவதில்லை. செம்பு-80%, வெள்ளி, ஈயம், தங்கம், வெள்ளி, கூட்டுக்கலவையாக-20% என்கின்ற கலவையை பாரம்பரிய முறையான மெழுகு வடிவத்தினை ஆற்று வண்டல் கட்டி காயவைத்து பின்பு மெழுகினை எடுத்து வார்படம் செய்கின்ற இம்முறைதான் இவ்வுலோக கலவைக்கு ஏற்றதாக உள்ளது.
மாற்று முறையான பெட்டி வார்ப்பட முறையில் பித்தளை உலோகத்தால் தான் வார்க்கமுடியும். இக்கூட்டு கலவைக்கு பெட்டி வார்ப்பட முறை ஏற்றது அல்ல. முதலில் மெழுகில் சிலை வடிவமைக்கப்படுகிறது. அதன் அளவு உத்தம தச தாளம், மத்திம தச தாளம், அதம தச தாளம் இதுபோன்ற மூன்று தாள பிரமாணங்களில் சிற்ப சாஸ்திரப்படி, சிலையின் அளவுகள் தென்னை ஓலையால் பங்கிட்டு கொள்ளப்படுகிறது.
அளவுகள் வைத்து முகம், மார்பு, கால், அமைத்து மெழுகில் வடிக்கப்படுகிறது. பிறகு ஆற்று வண்டல் மண்ணை அதன்மேல் பூசி தயார் செய்யப்படுகிறது. பின்னர் அதனை வெயிலில் காயவைத்து, வறட்டி விறகுகளால் சூடேற்றப்படுகிறது. அப்பொழுது மெழுகு வெளியேற்றப்படுகிறது. பின்பு செம்பு மற்றும் உலோக கலவையை 80:20 சதவீதம் என்ற சதவீதத்தில் உறுதி செய்யப்படுகிறது. அதன்பிறகு பூசிய மண் உடைத்து எடுக்கப்படுகிறது. இப்பொழுது மெழுகில் வடித்த உருவமானது உலோகத்தில் கிடைக்கிறது. இந்த சிலைக்கு நிறைய வேலை இருக்கிறது. அதாவது செதுக்குதல், கிராபி, சிசா, நகாசு, வேலைப்பாடுகள் முதலானவை உள்ளன. பிறகுதான் சிலைக்கு மெருகேற்றப்படுகிறது. இந்த உலோக சிற்பங்கள் கடல் கடந்தும் நம் பெருமையை பறைசாற்றி வருகின்றன.