Valentines Day: "காதல் தேசம் முதல் குட்டி வரை" காலத்திற்கும் அழியாத முக்கோண காதல் படங்கள்!
காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழில் வெளியாகிய எவர்கிரீன் முக்கோண காதல் திரைப்படங்களை கீழே காணலாம்.

உலகம் முழுவதும் காதலர் தினத்திற்காக தயாராகி காதலர்கள் தயாராகி வருகின்றனர். காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முக்கோண காதல் கதை திரைப்படங்களை கீழே காணலாம்.
காதல் தேசம் ( 1996)
இயக்குனர் கதிர் இயக்கிய படம் காதல் தேசம். கல்லூரி நண்பர்களான வினித் - அப்பாஸ் இருவரும் தங்களது தோழியான தபுவை நேசிக்கின்றனர். இது இவர்கள் இருவருக்கும் தெரியாமலே இருக்கிறது. இந்த நிலையில், இறுதியில் என்ன நடக்கிறது? என்பதே படத்தின் கதை. துள்ளலான கல்லூரி படமாக காதல் வலியுடன் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி படம் ஆகும். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை ஆகும்.
பூவே உனக்காக ( 1996)
நடிகர் விஜய்க்கு கிடைத்த முதல் ப்ளாக்பஸ்டர் வெற்றி படம் பூவே உனக்காக. இந்த படத்தில் விஜய் நேசித்த பெண் இன்னொருவரை நேசிக்கும் நிலையில், விஜய் தனது காதலியின் காதலுக்காக என்ன செய்கிறார்? என்பதே படத்தின் கதை. விஜய்யின் காதல் என்ன ஆனது? அவரது தியாகம் என்ன? என்று அழகான யதார்த்தமான படமாக பூவே உனக்காக அமைந்தது. காதலிற்கான இலக்கணமாக இன்றளவும் இந்த படம் பலராலும் பார்க்கப்படுகிறது.
மின்சார கனவு: (1997)
1997ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் மின்சார கனவு. பிரபுதேவா, அரவிந்த்சாமி, கஜோல் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆகும். அரவிந்த் சாமி கஜோலை தீவிரமாக காதலிக்க, தனது காதலுக்கு உதவுமாறு பிரபுதேவாவிடம் கேட்கிறார். ஆனால், பிரபுதேவா மீது கஜோல் காதல்வயப்பட இறுதியில் என்ன நடக்கிறது? என்பதே படத்தின் கதை. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படம் ரசிகர்களை இன்றும் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.
நினைத்தேன் வந்தாய் ( 1998)
விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் நினைத்தேன் வந்தாய். தன் கனவில் வரும் பெண்ணைத் தேடி வரும் நிலையில் தேவயானியுடன் விஜய்க்கு நிச்சயம் நடக்க, தனது கனவு நாயகி தேவயானி தங்கை ரம்பா என்று தெரிய வர விஜய்யின் காதல் என்ன ஆனது? என்பதே படமாக நகர்ந்திருக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
படையப்பா ( 1999)
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் படையப்பா. ரஜினியின் திரை வாழ்வை படையப்பாவை தவிர்த்து எழுத முடியாது. இந்த படமே ஒரு முக்கோண காதல் கதையின் அடிப்படையே ஆகும். ரஜினியை விரும்புவார் ரம்யா கிருஷ்ணன். ஆனால், ரஜினி செளந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்வார். இதற்கு ரம்யா கிருஷ்ணன் எப்படி பழிவாங்குவார்? ரஜினி அதை எப்படி எதிர்கொள்வார்? என்பதை ஆக்ஷன் திருவிழாவாக கே.எஸ்.ரவிக்குமார் எடுத்திருப்பார்.
ஷாஜகான் ( 2001)
விஜய் ஆக்ஷன் ஹீரோவாக மாறுவதற்கு முன்பு நடித்த காதல் திரைப்படங்களில் ஷாஜகான் மறக்கவே முடியாதது. விஜய் அனைவரது காதலையும் சேர்த்து வைக்க அவர் விரும்பும் பெண் அவரது நண்பனை நேசிக்கும் நிலையில் கிளைமேக்ஸ் என்ன ஆனது? என்பதே படத்தின் கதை ஆகும். பாடல்கள் இப்போது கேட்டாலும் தித்திக்கும். இந்த படத்தை ரவி இயக்கியிருப்பார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ( 2001)
அஜித், மம்மூட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் என பலர் நடித்த இந்த படம் முழு முக்கோண காதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மம்மூட்டி ஐஸ்வர்யா ராயை விரும்ப, அவர் அப்பாசை நேசிப்பார். இறுதியில் இவர்களது காதல் என்ன ஆனது? என்பது படத்தில் காட்டப்பட்டிருக்கும். அஜித் - தபு இடையேயான காதல் இடையே இவர்களது மம்மூட்டி - ஐஸ்வர்யா ராய் - அப்பாஸ் முக்கோண காதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும்.
ரோஜா கூட்டம் ( 2002)
நடிகர் ஸ்ரீகாந்த் அறிமுகமான முதல் படம் ரோஜா கூட்டம். இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக இது உள்ளது. சசி இயக்கிய இந்த படத்தில் நாயகன் ஸ்ரீகாந்த் நாயகி பூமிகாவை நேசிக்க அவர் ஜெய் ஆகாஷை விரும்புவார். இந்த சூழலில் வெளிநாட்டிற்கு ஜெய் ஆகாஷ் செல்லும் நிலையில், ஸ்ரீகாந்த்துடன் வசிக்கும் சூழலுக்கு பூமிகா தள்ளப்படுகிறார். வெளிநாட்டில் இருந்து ஸ்ரீகாந்த் திரும்பிய நிலையில் ஜெய் ஆகாஷ் - பூமிகா திருமணம் நடந்ததா? ஸ்ரீகாந்த் காதல் என்ன ஆனது? என்பதை அழகாக எடுத்திருப்பார்கள்.
குட்டி ( 2010)
தனுஷ் நடித்த குட்டி திரைப்படம் ஒரு முக்கோண காதல். தனுஷ் ஸ்ரேயாவை நேசிக்க, ஒரு நெருக்கடியின்போது ஸ்ரேயா மற்றொருவரை நேசிக்கிறார். இந்த சூழலில், ஸ்ரேயா மீதான தனுஷின் காதல் என்ன ஆனது? என்பதை படமாக எடுத்திருப்பார்கள். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் துள்ளலான படமாக இந்த படம் அமைந்திருக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

