அப்பாடா... திறந்துட்டாங்க: தஞ்சை ரயில் நிலையத்தில் வழக்கமான இடத்திற்கு வந்த டிக்கெட் கவுன்டர்
3 மாதங்களுக்கு பின்னர் தஞ்சை ரயில் நிலையத்தில் வழக்கமான இடத்தில் டிக்கெட் வழங்கும் மையங்கள் திறக்கப்பட்டு செயல்படுவதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்: 3 மாதங்களுக்கு பின்னர் தஞ்சை ரயில் நிலையத்தில் வழக்கமான இடத்தில் டிக்கெட் வழங்கும் மையங்கள் திறக்கப்பட்டு செயல்படுவதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் பயணிகள் மகிழ்ச்சி
தஞ்சை ரயில் நிலையத்தில் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பயணிகளின் வசதிக்காக முன்பகுதியில் செயல்பட்டு வந்த டிக்கெட் வழங்குதல் மற்றும் முன்பதிவு மையங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் பணிகள் முடிவடைந்ததையடுத்து 3 மாதங்களுக்குப்பிறகு டிக்கெட் வழங்கும் மையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வருமானம் கொடுப்பதில் 2ம் இடம்
திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் தரும் ரயில் நிலையம் தஞ்சை ரயில் நிலையம்தான்.கடந்த 2023-2024-ம் ஆண்டில் மட்டும் ரூ.51.63 கோடி வருவாய் டிக்கெட் மூலம் கிடைத்துள்ளது. 42 லட்சத்து 52 ஆயிரம் பயணிகள் தஞ்சைக்கு வந்து சென்றுள்ளனர். இதற்கிடையில் மத்திய அரசு நாடு முழுவதும் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்த உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆகஸ்ட் 6-ந்தேதி தொடங்கி வைத்தார்.
ரூ.23 கோடியில் நவீன வசதிகள்
இதன்படி ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, லிப்ட், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, கண்காணிப்பு கேமரா, வை பை வசதி என ஏராளமான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் மட்டும் ரூ.23 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நிழற்கூரை அமைக்கும் பணிகள்
தஞ்சை ரெயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. இதில் 1 மற்றும் 2 நடைமேடைகள் மட்டும் அதிக பயன்பாட்டில் இருந்து வருகிறது. 5 நடைமேடைகளிலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மேற்கூரைகள் உள்ளன. பல இடங்கள் திறந்த வெளியாக இருப்பதால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் முதல் கட்டமாக நிழற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக நடைமேடைகளில் பொக்லின் எந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதே போல் பழைய கட்டிடங்களின் மீது இருந்த மேற்கூரைகளை அகற்றும் பணிகளிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பயணிகளுக்கு குளிர்சாதனை அறை, நவீன கட்டண கழிவறை, பொருட்கள் வைக்கும் அறை ஆகியவையும் கட்டப்பட்டு வருகின்றன.
டிக்கெட் வழங்கும் மையங்கள் திறப்பு
தஞ்சை ரயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள நுழைவுவாயில் பகுதியில் சீரமைப்பு பணிகள் மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்கள் புனரமைப்பு உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ரயில் நிலையத்தின் முன்பகுதி மூடப்பட்டு ரயில் நிலையத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லும் வழியாக பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அதற்கும் தடை விதிக்கப்பட்டு ரயில் நிலையத்தின் பின்பகுதி வழியாக பயணிகள் வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இதையடுத்து தற்காலிகமாக திறக்கப்பட்ட டிக்கெட் கவுண்டரும் மூடப்பட்டன. 2-வது நுழைவு வாயிலான பின்பகுதியில் தற்காலிக டிக்கெட் முன்பதிவு மையங்களும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் திறக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் பயணிகள் பெரும்பாலும் முன்பகுதி வழியாகவே சென்று வருவதால் அங்கு பணிகள் முடிவடையும் வரை தற்காலிகமாக டிக்கெட் முன்பதிவு மையங்களை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். தற்போது ரயில் நிலையத்தின் முன்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், டிக்கெட் வழங்கும் மையங்கள், முன்பதிவு மையங்களில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து அது செயல்பாட்டுக்கு வந்தது.
ரயில் வரும் நேரம் குறித்த டிஜிட்டல் தகவல் பலகை
மேலும் பயணிகளும் முன்பதிவு வழியாகவும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு மையம் மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் மையம், தட்கல் டிக்கெட் மையம் முன்பகுதியிலேயே 3 மாதங்களுக்குப்பிறகு செயல்பாட்டுக்கு வந்ததால் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளதோடு அவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரயில்கள் வந்து செல்லும் நேரம் குறித்த டிஜிட்டல் தகவல் பலகையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பயணிகளும் முன்பதிவு வழியாகவும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு மையம் மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் மையம், தட்கல் டிக்கெட் மையம் முன்பகுதியிலேயே 3 மாதங்களுக்குப்பிறகு செயல்பாட்டுக்கு வந்ததால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளதோடு அவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரெயில்கள் வந்து செல்லும் நேரம் குறித்த டிஜிட்டல் தகவல் பலகையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.