பக்தனுக்கு திதி கொடுத்த சாரங்கபாணி பெருமாள்... எந்த தலம் தெரியுங்களா?
தன்னுடைய பக்தனுக்காக பெருமாள் சுவாமியே நேரில் வந்து திதி கொடுப்பதாக ஐதீகம். இதையடுத்து தீபாவளி அன்று பொற்றாமரை குளத்தில் லெட்சுமிநாராயணுக்காக பெருமாளான சாரங்கபாணியே திதி கொடுப்பது ஐதீகம்.

தஞ்சாவூர்: தீபாவளியன்று பக்தனுக்கே திதி கொடுத்த தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணிபெருமாள் பற்றி தெரியுங்களா? தெரிந்து கொள்வோம் வாங்க.
108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுவதும் தமிழ்வேதமாக கருதப்படும் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாடப்பெற்ற திருத்தலம் ஆகிய பெருமைகளுக்கெல்லாம் உரியதாக கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 12 வது திவ்ய தேசம். இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும், சுற்றுப்புற சுவர்களில் அழகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன. 11 நிலைகளையுடைய இது, 150 அடி உயரம் கொண்டது. இத்தலத்து தேரும் விசேஷமானது. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், "ரதபந்தம்' என்று அழைக்கப்படுகிறது.
கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். கும்மாயம்: கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளுக்கு பயத்தம்பருப்பு வெல்லம், நெய் கொண்டு தயாரித்து படைக்கும் நைவேத்தியத்தின் பெயர் கும்மாயம்.
மிகவும் பழமையான இத்திருக்கோயிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். இக்கோயிலின் சித்திரை தேரோட்டம் தமிழகத்தில் உலாவரும் மூன்று முக்கிய தேர்களில் ஒன்றாகவும், திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேருக்கும் இணையாக புகழ்பெற்றதாகும்.
இந்த புகழ்பெற்ற கோயிலை கடந்த ஆயிரத்தி 500 ஆண்டுகளுக்கு முன் லெட்சுமிநாராயணன் என்ற பக்தர் பெருமளவு திருப்பணியை மேற்கொண்டு கட்டினார். இந்த கோயிலை கட்டி முடிந்த பக்தர் லெட்சுமிநாராயணனுக்கு குடும்பம் எதுவும் கிடையாது. கோயிலே கதியாக இருந்தார். இந்நிலையில் இவர் காலம் சென்ற பின் அவருக்கு திதி கொடுக்க யாரும் இல்லை. தனக்கு தொண்டு செய்த பக்தனுடைய திதியை கொடுக்க யாருமே இல்லை என்ற வேதனை பெருமாளான சாரங்கபாணிக்கு ஏற்பட்டது.
இதையடுத்து ஒவ்வொரு தீபாவளி அன்றும் தன்னுடைய பக்தனுக்காக பெருமாள் சுவாமியே நேரில் வந்து திதி கொடுப்பதாக ஐதீகம். இதையடுத்து தீபாவளி அன்று பொற்றாமரை குளத்தில் லெட்சுமிநாராயணுக்காக பெருமாளான சாரங்கபாணியே திதி கொடுப்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு தீபாவளியன்றும் பக்தனுக்காக பெருமாளே திதி கொடுப்பதும் இன்றளவும் நடைபெறுகிறது.
திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும். இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.





















