மயிலாடுதுறை: குவைத்திற்கு சென்ற மகன் உயிரிழப்பு - உடலை கொண்டுவர கோரி தந்தை மனு
வெளிநாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மகனின் உடலை மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்களாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுல்தான் மெய்தீன் என்பவரின் மகன் சர்புதீன். இவர் கடந்த மாதம் 3 -ஆம் தேதி ஓட்டுநர் பணிக்காக குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மூன்று நாட்கள் கழித்து பெற்றோரை தொடர்பு கொண்ட சர்புதீன் தன்னை குவைத் முதலாளி ஓட்டுநர் வேலைக்காக அழைத்து வந்து பாலைவனத்தில் ஆடு மேய்க்க சொல்லி துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். பின்னர் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், பலமுறை தொடர்பு கொண்டும் அவருடன் பேசமுடியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் போனை எடுத்து பேசிய குவைத் முதலாளி ஜனவரி 29 -ஆம் தேதி சர்புதீன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சர்புதீனின் தந்தை சுல்தான் மெய்தீன் மற்றும் அவரது உறவினர் செய்வதறியாது திகைத்து போயினர். தொடர்ந்து நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து, சர்புதீனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் அதிகாரிகளிடம் மனு அளித்து சென்றிருந்தனர்.
இதையடுத்து மாலை அலுவலகத்திற்கு திரும்பிய ஆட்சியரிடம் அதிகாரிகள் மனுவை பார்வைக்கு கொண்டு சென்றனர். இதை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, அவர்களது கோரிக்கை துறை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போது உடலை சொந்த ஊர் கொண்டுவர துரித நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி ஆறுதல் தெரிவித்தார். உடனடியாக நடவடிக்கை எடுத்ததோடு மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அது குறித்து விளக்கம் அளித்த ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பல இளைஞர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் பிரிந்து இது போன்று கடல் கடந்து பல ஆயிரம் கிலோமீட்டர் வெளிநாடுகளுக்கு செல்லும் சூழலில் இதுபோன்று அவர்கள் தவறான பணிகளுக்கு செய்ய வற்புறுத்துவதும், பணிக்கு செல்பவர்கள் உயிரிழப்பதும் தொடரும் சோகமாகவே இருந்து வருகிறது.