AIADMK: அதிமுகவின் அடுத்த அதிரடி நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திற்கு செல்லும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்..!
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை அங்கீகரிக்க கோரி இன்று தேர்தல் ஆணையத்தை அணுகுகிறார் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை அங்கீகரிக்க கோரி இன்று தேர்தல் ஆணையத்தை அணுகுகிறார் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவையும், ஈபிஎஸ்ஸை இடைக்கால பொதுச்செயலாளராகவும் அங்கீகரிக்க வேண்டும் எனக்கோரி இன்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தரப்பில் சி.வி சண்முகம் செல்கிறார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது செல்லும் என்ற தீர்ப்பை வழங்கி ஓ. பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
எடப்பாடி தலைமையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், இரு தரப்பு வாதங்களும் நீதிபதிகள் முன்பு வைத்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தடையையும் உச்சநீதிமன்றம் நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 2023ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதிக்கும், அதன் பின்னர் ஜனவரி 9ஆம் தேதிக்கும், வழக்கினை மீண்டும் ஒத்திவைத்தது. கடந்த 16ஆம் தேதி இரு தரப்பையும் எழுத்து பூர்வமான பதிலை கேட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தான் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் இருக்கப்போகிறது என்பதால் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் கட்சி எடப்பாடிக்கு தான் என தெரிய வந்துள்ளது. இதனால் பொதுகுழு மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்தை அணுகுகிறது அதிமுக.
என்ன நடந்தது..?
இபிஎஸ் தரப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த பொதுகுழு நடந்து கொண்டு இருக்கையில் ஓபிஎஸ் தரப்பினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களைக் கைப்பற்றினர். இதனால் பெரும் அரசியல் பதற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் முதலில் பொதுக்குழு செல்லாது எனவும், அதன் பின்னர் செல்லும் என இரு வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. டிசம்பர் 6-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகள் மீது தேர்தல் ஆணையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப்பணிகளை சீராகச் செய்யமுடியவில்லை, எனவே தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையத்தினை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது என ஒபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு:
இந்த வழக்கின் தொடக்கத்தில், அதிமுக-வின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமிக்க முடியும் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், ஆனால் அது கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த விசாரணை வரும் வரை, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இபிஎஸ் தரப்பு:
அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் தேர்வு செய்துள்ளதாக 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள், தங்களது ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்கியிருந்தனர். இந்நிலையில் வழங்கப்பட்ட கடிதங்களை, தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் தரப்பு சமர்பித்தது.
டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம், உறுப்பினர்களின் கடிதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் சமர்ப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.