எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
பணப்பட்டுவாடா செய்யத்தான் அந்த பணத்தை வைத்திருந்துள்ளார் என சந்தேகிக்கும் அளவில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களும் வைத்திருந்துள்ளனர். அதையும் பறிமுதல் செய்தனர்.
வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பூஞ்சோலை சீனிவாசன் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2019 நாடாளுமன்றத்தேர்தலிபோது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ரூ.11 கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அமைச்சர் துரை முருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், “உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் எனக்கும் தெரியும். எனக்கு யார் வந்திருக்காங்கன்னு தெரியவில்லை. எந்த துறை என எனக்கு எதுவும் தெரியவில்லை. யாரும் வீட்டில் இல்லை” எனக் குறிப்பிட்டார்.
மகன் கதிர் ஆனந்த் வீட்டில் ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக உள்ளவர் பூஞ்சோலை சீனிவாசன். திமுகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என சொல்லப்படும் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் போது மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை பயன்படுத்திக்கொண்ட வருமான வரித்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. மேலும், பூஞ்சோலை சீனிவாசன் வீடூ அவரது உறவினருக்கு சொந்தமான வீடு, சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சத்து 57 ஆயிரத்து 10 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் மூட்டை மூட்டையாக பெட்டி பெட்டியாக 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு பணப்பட்டுவாடா செய்யத்தான் அந்த பணத்தை வைத்திருந்துள்ளார் என சந்தேகிக்கும் அளவில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களும் வைத்திருந்துள்ளனர். அதையும் பறிமுதல் செய்தனர்.