செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்.. துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு! பரபரக்கும் வேலூர்
வேலூர் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக மூத்த நிர்வாகியான துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராகவும் நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் கதிர் ஆனந்த் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீட்டிற்கு இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அவரது வீட்டு முன்பு திமுகவினர் படைசூழ திரண்டுள்ளனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் 10 க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் அமைச்சரின் வீட்டின் முன் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைச்சர் குடும்பத்துக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சருக்கு சொந்தமான தனியார் கல்லூரியிலும் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு நெருக்கமானவராக கருதப்படும் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 11 கோடி ரூபாய் தேர்தலுக்கு பணம்பட்டுவாடா செய்தது அம்பலமானது. இதன் காரணமாக அந்த தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மூன்று மாதங்களுக்கு பிறகு தேர்தல் நடத்தப்பட்டு கதிர் ஆனந்த் நாடாளுமன்ற உறுப்பினரானார். மேலும் கடந்த நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டும் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.இந்நிலையில் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இதன் காரணமாகவே தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ளதால் அவரது குடும்பத்தினர் வேலூர் வீட்டில் தற்போது உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து தற்போது அமைச்சர் துரைமுருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.