Mayiladuthurai: முதல் நாள் மனு, மறுநாள் நடவடிக்கை - மயிலாடுதுறை ஆட்சியரின் தூரித நடவடிக்கை
மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் வசிக்கும் 64 ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு கடந்த 1998 -ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டு மனை பட்டாவிற்கான வரைபடம் வழங்கப்பட்டது. அந்த இடத்துக்கு செல்ல வாய்க்காலை கடந்து செல்ல வேண்டி இருந்ததால் அங்கு பாலம் வசதி இல்லாத காரணத்தால் அரசால் வழங்கப்பட்ட அந்த இடத்தில் யாரும் குடியேறவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு பலர் அந்த இடத்தை தற்போது ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், பட்டா வரைபடம் வழங்கிய இடத்தில் யாரும் வீடு கட்டி குடியேறாததால் அந்த இடத்தை தகுதி உள்ள வேறு நபர்களுக்கு பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க கூறி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலகத்தில் அறிவிப்பானை நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை சந்தித்த 64 குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு செல்வதற்கு வழியே இல்லை என்றும், எப்படி வீடு கட்டி குடியேறுவது என்றும் தங்கள் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்து அதே இடத்தில் பட்டா வழங்கி அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் அமைத்து தர வேண்டும் என்றும் அந்த இடத்துக்கு செல்வதற்கு பாலம் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்தநிலையில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அம்பிகாபதி ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் நாகவல்லி சர்வேயர் சிந்துஜா கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தையும், வாய்க்காலையும் பார்வையிட்டு விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மறு அளவீடு செய்து அந்த 64 பயனாளிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மறுகனமே அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிகழ்வை அடுத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக பொறுப்பேற்ற மகாபாரதி பொறுப்பேற்ற நாள் முதல் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.