அரசு வேலை வாய்ப்பு மொத்தம் 80 இடம்... 71 ஆயிரம் வரைக்கும் சம்பளம்: 8ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு...
நெடுஞ்சாலைத்துறையில் தற்போது 8ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வாய்ப்பு அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் மற்றும் ஓட்டுநர் போன்ற பணியிடங்கள்.

தஞ்சாவூர்: 8 ஆம் வகுப்பு படித்தவர்களா நீங்க. அப்ப செம வேலை வாய்ப்பு உங்களுக்காக வந்திருக்கு. தகவல் தாத்தா தனபாலு உங்களுக்காக என்ன அரசு வேலைன்னு சொல்றாரு. முழுமையான விபரங்களையும் சொல்வாரு. படிச்சு பார்த்துக்கோங்க. தகவல்தாத்தாவும், கோபக்கார குமாரும் பேசிக்கிட்டதை அப்படியே வேலை தேடும் உங்களுக்காக ஒட்டுக் கேட்டு கொடுத்து இருக்கோம்
தகவல் தாத்தா: அடேய் பேராண்டி கோபக்கார குமாரு. எங்கடா தலையை சொறிஞ்சிக்கிட்டே வானத்தை பார்த்துக்கிட்டு இருக்க.
கோ.குமாரு: பெரிசுங்க நீங்க சொன்னப்பல்லாம் கேட்டல தாத்தா. ஒழுங்கா படிச்சு இருந்தா இன்னைக்கு ஏதாச்சும் வேலைக்கு போய் இருப்பேன். குடும்பத்தை ஓட்டறதே சிரமமாக இருக்கு.
தகவல் தாத்தா: அடேய் நீ படிச்ச எட்டாப்புக்கே வேலைவாய்ப்பு இருக்குடா. அதை பற்றி தெரியுமா. உனக்கு கை நிறைய சம்பளமுடா. கவர்மென்ட்டு வேலைடா. உனக்கு தெரியாதா.
கோ.குமாரு : எனக்கு தெரிஞ்சு இருந்தா இப்படியா நடுரோட்டுல நிப்பேன். சீக்கிரம் சொல்லு தாத்தா. நானும் தெரிஞ்சுக்கிட்டு அந்த வேலைக்கு முயற்சி செய்வேன்ல.
தகவல் தாத்தா: தமிழக கவர்மெண்ட் நெடுஞ்சாலைத்துறையில்தான் இந்த வேலை வாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க. 8ம் வகுப்பு பாஸ் பண்ணியிருந்தாலே போதுமாம்டா பேராண்டி. 80 காலிப்பணியிடங்கள் இருக்காம். நேர்முகத் தேர்வு வைச்சு ஆட்கள் தேர்வு செய்ய போறாங்க. தேர்வாயிட்டா ரூ.71,900 வரை சம்பளம்டா.
கோ.குமாரு : என்ன தாத்தா சொல்றே. உண்மையிலேயே. எனக்கெல்லாம் எங்க கவருமெண்ட்டு வேலை கிடைக்கும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். நீங்கள்ளா அப்பவே பெரிய படிப்பு படிச்சீங்க. நான்தான் சரியா படிக்கலை.
தகவல் தாத்தா: அட விஷயத்தை கேளும்டா. நெடுஞ்சாலைத்துறையில் தற்போது 8ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வாய்ப்பு அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் மற்றும் ஓட்டுநர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு. மொத்தம் 80 காலியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட இருக்காங்க. எந்ததெந்த மாவட்டத்துக்கு எவ்வளவு இடம்னு தெரிஞ்சுக்கோ. கோவையில் 18 இடங்கள், தஞ்சாவூரில் 31, வேலூரில் 5, கடலூரில் 9, திருப்பூர், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடமும், திருச்சியில் 8, தூத்துக்குடியில் 2 மற்றும் நாகர்கோவிலில் 5 இடங்கள் என அறிவிச்சு இருக்காங்க பேராண்டி.
கோ. குமாரு : சரி தாத்தா. எந்ததெந்த வேலைக்கு என்னன்ன தேவைன்னு தெரியுமா.
தகவல் தாத்தா: அடேய் அதெல்லாம் சொல்லாம இருப்பேனா? 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் பதவிக்கு குறைஞ்சது இரண்டு ஆண்டுகள் அனுபவச் சான்று தேவைன்னு அறிவிச்சு இருக்காங்க. விண்ணப்பிக்கும் நபர் 01.07.2025 தேதியின்படி 35 வயதை கடந்திருக்கக் கூடாதுடா பேராண்டி. அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளமாம். ஓட்டுநர் பணிக்கு அதிகபட்சமாக ரூ.71,900 வரை மாதச்சம்பளம். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யறாங்க. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நியமனம் தற்காலிகமானது. தேவையெனில் பணிநியமனத்தை ரத்து செய்யும் அதிகாரம் கண்காணிப்பு பொறியாளருக்கு இருக்கு.
கோ. குமாரு : என்ன தாத்தா கடைசியில குண்ட தூக்கி போடுற.
தகவல் தாத்தா: அடேய் நாம ஒழுங்கா வேலை பார்த்தா ஏன் நம்மள நீக்க போறாங்க. குறுக்க... குறுக்க பேசாத. அப்புறம் சொல்ல வர்றதை மறந்திடுவேன். மாவட்ட இணையதளங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதோட அவங்க கேட்கிற ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்பனும். நோட் பண்ணிக்கோ... விண்ணப்பங்கள் நவம்பர் 20, 2025க்குள் சென்று சேர வேண்டும். இந்த வேலைவாய்ப்பு, குறைந்த கல்வித்தகுதியுடன் அரசு துறையில் உயர்ந்த சம்பளம் பெறும் வாய்ப்பு. விட்டுடாதே. அடேய் பேராண்டி எங்கடா பிடறி தட்டுற மாதிரி ஓடுறே.
கோ. குமாரு : போய் வேலைய பாரு தாத்தா. இன்னைக்கே வேலைக்கு விண்ணப்பத்தை அனுப்பதான் ஓடுறேன்.
தகவல் தாத்தா: நீங்களும் இதை மிஸ் பண்ணீடாதீங்க. நெடுஞ்சாலைத்துறை இணையத்தில விண்ணப்பத்தை டவுன்லோடு செஞ்சு உடனே அனுப்பிடுங்க.





















