சினைக் காலத்தில் ஆடுகளை முறையாக பராமரிப்பது எப்படி? கால்நடைத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?
மண், மணல் போன்றவற்றை நக்கி சுவைப்பது மேலும், கொட்டகையில் அடைத்து வைக்கும்போது கொட்டகை சுவர்களை நக்கி சுவைப்பது போன்ற அறிகுறிகள் மூலம் சினை ஆடுகள் தாது உப்பு பற்றாக்குறையை வெளிப்படுத்தும்.

தஞ்சாவூர்: இன்றைய காலக்கட்டத்தில் விவசாயிகளுக்கு வருமானத்தை அளிப்பது என்றால் அது ஆடுகள் வளர்ப்புதான். அந்த வகையில் சினைக்காலத்தில் ஆடுகளுக்கான தீவனத்தை பராமரிக்கும் முறை குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கால்நடை வளர்ப்பில் ஆடு வளர்ப்பு என்பது மிகவும் லாபகரமான தொழில் ஆகும். ஆடுகளின் சினைக்காலம் 148 முதல் 156 நாட்கள் ஆகும். ஆட்டை கிடாவிற்கு சேர்த்த தேதியை குறித்து வைப்பதின் மூலம் சினை காலத்தை அறிந்து அதற்கு ஏற்றார் போல சினை ஆடுகளை பராமரிக்கலாம். சரியான காலங்களில் இனவிருத்திக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட காலங்களில் தரமான குட்டியை ஈன்ற செய்வதன் மூலமாக லாபகரமான பண்ணையை உருவாக்கலாம். எனவே சினைப்பட்ட ஆடுகளை பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

சினை காலத்தில் ஆடுகளின் முழு தீவன தேவையை பூர்த்தி செய்வது மேய்ச்சல் தரையே ஆகும். தேவையான சரியான தீவனம் கிடைக்கும் நிலையில், ஆடுகளின் உடல் நலன் பாதுகாக்கப்பட்டு தாயின் வயிற்றில் குட்டிகளின் வளர்ச்சியும் சிறப்பானதாகக் காணப்படும். தரமற்ற மேய்ச்சல் தரையில், ஆடுகள் தீவன தேவையை பூர்த்தி செய்து கொள்ள நிலத்துடன் ஒட்டி கிடைக்கக்கூடிய புல், பூண்டு மற்றும் விஷச் செடிகளையும் சேர்ந்து மேய்வதால், சினை ஆடுகளின் உடல் பராமரிப்பு பாதிப்பதுடன் குட்டிகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
சில நேரங்களில் சினை ஆடுகளின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு குட்டி வீச்சும், ஆடுகளின் உடல் நலன் பாதிப்பும் ஏற்படும். ஆகவே, தரமற்ற மேய்ச்சல் தரையின் மூலம் ஆடு கள் தீவன தேவையை பூர்த்தி செய்ய இயலாத |நிலையில் ஆடுகளின் உடல் பராமரிப்பு மற்றும் குட்டிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சரியான தீவனம் கொடுக்க வேண்டும். கர்ப்பக்காலத்தின் கடைசி 30 முதல் 40 நாட்கள் மிகவும் முக்கியமானதாகும். சினையுற்ற ஆடுகளின் கருவளர்ச்சி முதல் 100 முதல் 120 நாட்கள் வரை மிகவும் மெதுவாக நடைபெறும்.
சினைக்காலத்தின் கடைசி 30 முதல் 45 நாட்களில் 60 முதல் 80 சதவிகித வளர்ச்சி துரிதமாக நடைபெறும். எனவே இக்கால கட்டத்தில் ஆடுகளுக்கு தேவையான அளவு தரமான புரதம் நிறைந்த புல் மற்றும் பயிறு வகைத் தீவனத்துடன் தேவைக்கேற்ப கலப்புத் தீவனம் 100 முதல் 200 கிராம் கொடுப்பதன் மூலம் ஆடுகளின் உடல் நலன் பாதுகாப்பதுடன் குட்டிகளின் வளர்ச்சியும் சீராக இருக்கும். பராமரிப்பு இல்லாத ஆடுகளுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு குறைப் பிரசவ குட்டிகள் அல்லது மெலிந்த குட்டிகள் பிறக்கும். இதனால் குட்டிகளின் வளர்ச்சிக் குன்றி இறக்க நேரிடும். சினை ஆடுகளுக்கு இதர தீவனத்துடன் தினமும் நல்ல தரமான புரதம் நிறைந்த பயிறு வகைகள் வழங்குவது வளர்ச்சி, பால் உற்பத்தி போன்ற அனைத்து காலநிலைகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
மேய்ச்சலுக்காக திறந்து விடும்போது மண், மணல் போன்றவற்றை நக்கி சுவைப்பது மேலும், கொட்டகையில் அடைத்து வைக்கும்போது கொட்டகை சுவர்களை நக்கி சுவைப்பது போன்ற அறிகுறிகள் மூலம் சினை ஆடுகள் தாது உப்பு பற்றாக்குறையை வெளிப்படுத்தும். இக்கால நிலையில் ஆடுகளுக்கு தாது உப்பு கலவையை தீவனத்துடன் சேர்த்துக்கொடுத்தும் அல்லது தாது உப்புகலவை கட்டிகளை கொட்டகையின் பல இடங்களில் கட்டி தொங்கவிடுவதன் மூலமும் தாது பற்றாக்குறையை பூர்த்தி செய்யலாம். தாது உப்பு மற்றும் தாது உப்பு கட்டிகள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொலைநிலை மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
சினைக் காலத்தில் ஆடுகளை முறையாக பராமரிப்பது மூலம், ஆரோக்கியமான குட்டிகளை பெற்று, பண்ணையையும், அதன்வழி கிடைக்கும் ஆதாயத்தையும் பெருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















