விவசாயம் பொய்த்து போனதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி
மயிலாடுதுறை அருகே போதிய விளைச்சல் இல்லாததால் மனமுடைந்த விவசாயி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் 65 வயதான ஜெயராமன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து ஒருஜோடி மாடுகளை வளர்த்து பராமரித்து வந்துள்ளார். இவரது மகன் அருண்குமார் இளங்கலை பட்டம் படித்து முடித்து விட்டு வேலை தேடி வருகின்றார்.
விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வந்துள்ள ஜெயராமன் கடந்த குறுவை மற்றும் சம்பா பருவத்தில் தனது 2 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். ஆனால், கனமழையின் காரணமாக அவர் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த ஜெயராமன் ஒருகட்டத்தில் உறவினர்கள் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் (ஐஓபி) தனது மகன் மற்றும் மனைவி பெயரில் வைத்து 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார்.
பின்னர் அந்தப் பணத்தை வைத்து விவசாயம் மேற்கொண்ட ஜெயராமனுக்கு பருவமழையாலும், பருவம் தவறி பெய்த மழையாலும் சம்பா பொய்த்து போனது. தொடர்ந்து உளுந்து பயிரிட்டுள்ளார். உளுந்தும் பொதிய விளைச்சலை தரவில்லை. மேலும் பயிர் காப்பீட்டு செய்தும், அதிகாரிகள் உரிய முறையில் கணக்கீடு செய்யாமல் காப்பீட்டு தொகையும் கிடைக்காததால், நகை கடனை அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளான ஜெயராமன் மனமுடைந்து, தனது வயலில் குருணை விஷமருந்தினை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உறவினர் அளித்த புகாரின்பேரில் விளைச்சல் சரியில்லாத காரணத்தால் மனஉளசசல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக மணல்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சூழலில் இறந்த விவசாயி ஜெயராமன் வீட்டிற்கு விவசாயத் சங்கத்தை சேர்ந்த பலர் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் வங்கியில் பெற்ற கடனை அரசு தள்ளுபடி செய்து இறந்த விவசாயி மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.