குழந்தை பேறு இல்லையா... அப்போ நீங்க செல்ல வேண்டிய கோயில் எது தெரியுங்களா?
குழந்தை பேறு இல்லாதவர்களின் குறையை தீர்க்கும் கோயிலாக விளங்கி வருகிறது தஞ்சாவூர் கரந்தை பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணசாமி யாதவ கண்ணன் திருக்கோயில்.
தஞ்சாவூர்: குழந்தை பேறு இல்லாதவர்களின் குறையை தீர்க்கும் கோயிலாக விளங்கி வருகிறது தஞ்சாவூர் கரந்தை பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணசாமி யாதவ கண்ணன் திருக்கோயில். அட ஆமாங்க உண்மைதான் இங்கு நடக்கும் ஒரு நிகழ்வில் குழந்தை இல்லாதவர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல் நிறைவேறியதாக தெரிவிக்கின்றனர்.
சரிங்க இந்த கோயில் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. இக்கோயில் கி.பி 17-ம் நூற்றாண்டில் பிரதாப சிம்ம மகாராஜா என்கிற மராட்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். கிபி 1755-ம் ஆண்டு இக்கோயிலில் முதன்முதலாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் தீர்த்தங்களை பெற்றால் பெருமாளின் பரிபூரண அனுகிரகம் கிடைக்கும். “கிருஷ்ணா” என்று சொன்னால் பாவங்கள் போகும் என்று ஆன்மீக பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இது இந்த கோயிலில் இக்கோயிலின் முக்கிய சிறப்பாகும்.
ஸ்தல வரலாறு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
திருக்குளத்தில் பசுக்கள் தினந்தோறும் வந்து மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு பெரியவர் என்ன குளத்தில் திடீரென பசுக்கள் அடிக்கடி வந்து மேய்கின்றன என்று பார்க்கையில் அவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர் காளிங்க நர்த்தனனாக நடனம் ஆடிக்கொண்டே வரும் கிருஷ்ண பகவான் காட்சி தருகிறார். இதனால் மனம் மகிழ்ந்த அந்த பெரியவர் உடன் தான் பார்த்த கனவை ராஜாவிடம் தெரிவிக்கிறார். பின்னர் அந்த பகுதியில் சிறிய அளவிலான கோயில் அமைக்கப்பட்டது.
அதன் பிறகு யாதவ சமூகத்தை சேர்ந்த பெரியோர்கள் இந்த கோயிலை பராமரித்து வந்தனர். அதன்பிறகு பெரியண்ணா பிள்ளை என்பவராலே கோயில் கோபுரம், சுற்று பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டது.
தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள கோயில்
கோயில்களின் அமைப்பு பொதுவாக கிழக்கு நோக்கி இருக்கும். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்த கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை நினைவுபடுத்தும் விதமாக தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிட்த்தக்கது. மூலவராக வேணுகோபால சுவாமியும், விநாயகர் ஆஞ்சநேயர், ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி பரிவார தெய்வங்களாக அருள்பாலித்து வருகின்றனர்.
பஞ்ச கிருஷ்ண ஸ்தலம் என்ற சிறப்பு பெயரும் உண்டு
மேலும் வேணுகோபால சுவாமியாகவும், உற்சவ மூர்த்தியாக நவநீத கிருஷ்ணனாகவும், சுற்றுப்புறத்தில் காளிங்க நர்த்தனனாகவும், உள்ளிட்ட ஐந்து விதமான கிருஷ்ணர் பஞ்சகிருஷ்ண சுவாமியாக அருள்பாலித்து வருவதால் பஞ்சகிருஷ்ண ஸ்தலம் என்று இதற்கு சிறப்பு பெயரும் உண்டு.
வெண்ணாற்றங்கரை 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நீல மேக பெருமாள் கோயில் வைகாசி திருவோணத்தில் தஞ்சை நகர் முழுவதும் 28 கருட சேவைகள் நடைபெறும், அப்போது அனைத்து கருட சேவைகளும் இத்திருத்தலத்தில் கிருஷ்ணனின் புண்ணியங்களையும் ஆசியையும் பெற்ற பின்னரே தஞ்சை நகர் முழுவதும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும் முக்கிய சிறப்பாகும்.
இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா, நவராத்திரி வைகுண்ட ஏகாதசி, அட்சயத்திருதி உட்பட பல்வேறு விசேஷ நாட்களில் விழாக்கள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணர் பசுவாக தோன்றியதால் உருவான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பசு மாடுகள் இக்கோயில் உள்ளே சென்று பெருமாள் ஆசியை பெற்று செல்வது இக்கோயிலின் மிகச் சிறப்பாக நடைபெறும் நிகழ்வாகும்.
கிருஷ்ணரை தொட்டிலில் ஆட்டும் சிறப்பு நிகழ்வு
இக்கோயிலில் கிருஷ்ணரை தொட்டிலில் ஆட்டும் சிறப்பு நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்கி வருகிறது. அதனால் தொட்டில் ஆட்டும் சிறப்பு நிகழ்வில் குழந்தை இல்லாதவர்கள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து கலந்து கொள்கின்றனர்.