விஷ வண்டுகளால் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் உயிரிழப்புகள் - பொதுமக்கள் பீதி
மயிலாடுதுறை அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை கதண்டு வண்டு கடித்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கதண்டு என்ற கொடிய விஷவண்டு அதிகஅளவில் காட்டுப்பகுதியில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டதால் பனைமரங்கள், தென்னை மரங்களில் கூடுகட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய விஷவண்டு கூட்டமாக வந்து தாக்கும் குணம் கொண்டது. ஒருவரை 5 -க்கும் மேற்பட்ட கதண்டுகள் கடித்தால் உயிர்பிழைப்பது கடினம். தலையில் கடித்தால் விஷம் உடனடியாக மூளையை தாக்கும் கிட்னியை செயலிலக்க செய்யும். சிறு குழந்தைகளை இரண்டு வண்டுகள் கடித்தாலே உயிரிழக்க நேரிடும். வண்டுகள் இனத்தில் கொடிய விஷமுள்ள இந்த வண்டுகள் கூடுகட்டியிருப்பதை அறிந்து தகவல் தெரிவித்தால், அதை உடனடியாக தீயணைப்பு துறையினர் அழித்துவிடுவர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதி பனைமரங்களில் உள்ள கதண்டுகள் அழிக்கப்பட்டு வந்தாலும், கதண்டு விஷவண்டு தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அவ்வப்போது வந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அகர மணல்மேட்டை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன் என்பவரின் தாயார் 70 வயதான பட்டு குடும்பத்திற்கு உதவியாக வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருவாய் ஈட்டி வந்தார். தினந்தோறும் அருகில் உள்ள வயல்வெளி திடல் பகுதிக்கு சென்று ஆடு, மாடுகளை மேய்ப்பது வழக்கம். இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி வயல்பகுதி அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தபோது அங்கிருந்த பனைமரத்தில் மட்டை முறிந்து விழுந்து அதிலிருந்த கதண்டு வண்டுகள் கூட்டாக வந்து பட்டு மற்றும் அவரது உறவினர் மலர்கொடி என்பவரையும் தாக்கியுள்ளது.
CM MK Stalin: தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இதனை அடுத்து கதண்டு வண்டு தாக்குதலுக்கு ஆளான இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மலர்கொடி வீடு திரும்பிய நிலையில் பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பனை மரத்தில் கதண்டு வண்டுகள் தீயணைப்புதுறையினரால் அழிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக மணல்மேடு காவல்நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனர். கொடிய கதண்டு வண்டு தாக்கி மணல்மேடு சுற்றுவட்டாரப்பகுதியில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடராஜனின் குடும்பத்தாருக்கு பேருதவியாக இருந்த பட்டு உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் இது போன்ற விஷ வண்டுகள் அங்கங்கே கூடு கட்டி வருவதும், அவ்வப்போது மக்களையும், மரத்தடியில் விளையாடும் குழந்தைகளையும் கடித்து காயப்படுத்துவதும், இதனால் சிலர் உயிரிழக்கும் சம்பங்களும் நடந்தேறி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் உதவியுடன், தீயணைப்பு மீட்பு பணிகள் இல்லாத நேரங்களில் இது போன்று பழைமையான மரங்கள், கட்டிடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அவற்றில் கூடு கட்டியுள்ள விஷ வண்டுகளை அழிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமுக ஆர்வலர்கள் பலரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.