அம்மா உணவகத்தில் அசைவம்... இன்று முட்டை நாளை என்னவோ? அதிர்ச்சியில் மக்கள்
இது ஓட்டல் இல்லையே. மக்களின் பசியை போக்கும் மலிவு விலை உணவுகள் வழங்கும் உணவகம்தானே. இதனால் மது பிரியர்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு இங்கு அசைவ உணவு சாப்பிட வருகின்றனர்.

தஞ்சாவூர்: 2012ம் ஆண்டு அனைத்து தரப்பு ஏழை மக்களும் பயன் பெற வேண்டும். மலிவு விலையில் மக்கள் பசியாற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் தரமான உணவு மலிவு விலையில் கிடைக்க அம்மா உணவகத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடங்கினார். சைவ உணவுகள் வழங்கப்பட்டு வந்த அம்மா உணவகம் இன்று அசைவ உணவகமாக திருவாரூரில் மாறியே விட்டது. காரணம் வருமானம்.
இந்தியாவிலேயே முதல்முறையாக மலிவு விலையில் உணவு வழங்கும் 'அம்மா உணவகம்' திட்டத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2012-ல் தமிழகத்தில் தொடங்கினார். முதலில் சென்னையில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் பிற மாநகராட்சி பகுதிகளில் 108, நகராட்சிகளில் 139, ஊரகப் பகுதிகளில் 4 என மொத்தம் 658 அம்மா உணவகங்களை ஜெயலலிதா தொடக்கி வைத்தார். இந்த அம்மா உணவகத்தால் தமிழகம் முழுவதும் லட்டசக்கணக்கான நடுத்தர மக்கள் பசியை போக்கிக் கொண்டனர். நாளொன்றுக்கு ரூ.20 செலவில் 3 வேளை உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தவர் ஜெயலலிதாதான். அம்மா உணவகத்தில் காலையில் ஒரு இட்லி ரூ.1, பொங்கல் ரூ.5, மதியம் கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவை தலா ரூ.5, தயிர் சாதம் ரூ.3, இரவில் இரு சப்பாத்தி மற்றும் பருப்பு குழம்பு ரூ.3 என்ற மலிவான விலையில் விற்கப்பட்டு வருகிறது.
விலை குறைவு என்பதால் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பார்வையிட்டு வியந்து பாராட்டியுள்ளன. அவர்களது மாநிலங்களிலும் செயல்படுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைநோக்கு சிந்தனையுடன் ஜெயலலிதா அமல்படுத்திய இந்த அம்மா உணவகங்கள், பேரிடர் காலங்களில் உணவு விநியோகத்துக்கு பேருதவியாக கரம் கொடுத்தன. 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாநகரில் ஏற்பட்ட வெள்ள பேரிடரின் போது இந்த அம்மா உணவக கட்டமைப்புகள் பேருதவியாக இருந்தன. அதனால் இவ்விரு பெருவெள்ளத்தின் போதும் உணவு கிடைக்காமல் ஒருவர் கூட பட்டினியால் உயிரிழக்கவில்லை என்ற சாதனையை படைக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கின்போது, சாலையோர உணவகங்கள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன. பணிசெய்யும் இடங்கள், கல்லூரி மாணவர் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் கிடைக்கும் உணவை நம்பி இருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு 'பசிப்பிணி மருத்துவன்' இல்லமாகவே அம்மா உணவகங்கள் மாறின.
அப்போது அவர்களின் கண்களுக்கு, அம்மா உணவகங்கள் வரப்பிரசாதமாகவும், அட்சய பாத்திரமாகவும் தெரிந்தன. இப்படிப்பட்ட அம்மா உணவகம் தற்போது வர்த்தக ரீதியாக மாறி வருகிறது. பணம் குவிக்கும் இயந்திரமாக மாறி வருகிறது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
மலிவு விலையில் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் இன்று மற்ற ஓட்டல்கள் போல் நடுத்தர மக்களின் பணத்தை சுரண்டும் இடமாக மாறி வருகிறது. சைவ உணவுகள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த அம்மா உணவகம் இன்று அசைவ உணவின் கூடமாக மாறிவிட்டது. இதனால் மதுபிரியர்கள் மதிய வேளையில் மது அருந்திவிட்டு அம்மா உணவகத்தில் வந்து அசைவ உணவு வாங்கி சாப்பிடலாம் என்ற பேச்சுக்கு உள்ளாகி வருகிறது. இது வேறு எங்கும் இல்லை. திருவாரூரில்தான்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற்ற ஆரூர் அம்மா உணவகத்தில் சமீபகாலமாக முட்டை சேர்த்த அசைவ உணவுகளை தயாரித்து விநியோகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நகராட்சி கவுன்சிலர் கலிய பெருமாள் கூறுகையில், அம்மா உணவகம் என்றால் முழு சைவத்தில் உணவுகள் தயாரிக்கு வழங்கும் உணவகம்தான். ஆனால் இப்போது செலவுகள் கட்டுப்படியாகவில்லை என்று சிலரின் தவறான ஆலோசனையின்படி அம்மா உணவகத்தில் அசைவம் போடப்படுவது திட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும். நீண்டகால அனுபவம் உள்ள பணியாளர்களை உணவகத்தில் இருந்து வௌயேற்றி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அம்மா உணவக பணியாளர்கள் கூறுகையில், 10 ஆண்டுகளாக இங்கு பணியாற்றிய சிலர் அரசியல் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சாம்பார், தயிர் சாதம் தயாரிக்கப்பட்ட அம்மா உணவகத்தில் இப்போது முட்டை பிரதானமாகி உள்ளது. காலையில் முட்டை தோசை, மதியம் முட்டை கிரேவி, ஆம்லேட், அவித்த முட்டை விற்பனை செய்யப்படுகிறது. அசைவத்துக்கு மாறியதால் வியாபாரம் அதிகரித்துள்ளது என்கின்றனர் என வேதனையுடன் தெரிவித்தனர்.
சமூகஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், இது ஓட்டல் இல்லையே. மக்களின் பசியை போக்கும் மலிவு விலை உணவுகள் வழங்கும் உணவகம்தானே. இதனால் மது பிரியர்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு இங்கு அசைவ உணவு சாப்பிட வருகின்றனர். இனி இது பார் போல் சிக்கன் உணவுகளும் தயாரித்து தரும் இடமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அம்மா உணவகம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை சிதைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் சைவ உணவுகளையே வழங்க வேண்டும் என்றனர்.





















