Ariyalur: இப்படியும் ஒரு தாய்! - கரையில் மூத்த மகனை நிற்க சொல்லி விட்டு 2வது மகனுடன் பெண் தற்கொலை!
மூத்த மகன் லோகேஷை ஏரிக்கரையில் தனியாக நிற்க சொல்லி விட்டு தனது இடுப்பில் 3வது மகன் கவிலேஷை துப்பட்டாவால் இறுக்கமாக கட்டி விட்டு ஏரியில் பாண்டி லட்சுமி குதித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் 3 வயது குழந்தையை இடுப்பில் கட்டியபடி தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் அப்பெண்ணின் 7 வயது மகன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது தான் கொடுமையான விஷயமாக மாறியுள்ளது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே புங்கக்குழி - ஆதனூர் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ரகுபதி என்பவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாண்டி லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி லட்சுமியை ரகுபதி காதலித்து தான் 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு லோகேஷ் மற்றும் கவிலேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் அடிக்கடி திருப்பூர் மாவட்டத்துக்கு சென்று கட்டட வேலைப் பார்த்து சம்பாதித்து வந்தனர். இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களாக ரகுபதி திருப்பூருக்கு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் பாண்டி லட்சுமி தீபாவளி முடிந்த பிறகு தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு திருப்பூருக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 10) மாலை மீண்டும் அரியலூரில் உள்ள அம்பலவர் கட்டளை என்ற கிராமத்திற்கு பாண்டி லட்சுமி தனது மகன்களை அழைத்து வந்திருக்கிறார்.
பேருந்து நிலையம் அருகேயிருக்கும் கீழக் கொட்டேரியில் அவர் தனது மகன்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். இதன்பின்னர் மூத்த மகன் லோகேஷை ஏரிக்கரையில் தனியாக நிற்க சொல்லி விட்டு தனது இடுப்பில் 3வது மகன் கவிலேஷை துப்பட்டாவால் இறுக்கமாக கட்டி விட்டு ஏரியில் குதித்துள்ளார். நீருக்குள் சென்ற அம்மாவை நீண்ட நேரமாக காணவில்லை என கரையில் நின்ற லோகேஷ் கதறி அழுதுள்ளான்.
அவனின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் என்னவென்று கேட்க, லோகேஷ் விஷயத்தை சொல்லியுள்ளான். இதனால் அதிர்ச்சியடையந்த பொதுமக்களில் சிலர் உடனடியாக ஏரியில் குதித்து பாண்டி லட்சுமி, கவிலேஷை தேடினர். பின்னர் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்த நிலையில் இரண்டு பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் ரகுபதி மற்றும் இருவரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)





















