"நாடக காதல் போன்ற பிற்போக்குத்தனமான பிரச்சாரமே காரணம்" ஆணவ படுகொலை குறித்து திருமா கருத்து
நெல்லை கவின் ஆணவ படுகொலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தாமதமாக எதிர்வினை ஆற்றவில்லை என அக்கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமா விளக்கம் அளித்துள்ளார்.

நாடகக் காதல் என்பது போன்ற பிற்போக்குத்தனமான பிரச்சாரங்கள் இந்த மண்ணில் பரப்பப்பட்டதன் விளைவாகத்தான் ஆணவ படுகொலைகள் நடைபெறுவதாக விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"நாடகக் காதல் பிரச்சாரம்தான் காரணம்"
தூத்துக்குடியில் கவினின் பெற்றோரை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். ஆணவ படுகொலை குறித்து பேசிய அவர், "நெல்லை மாவட்டம் மென்பொருளாளர் கவின் ஆணவ படுகொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
கவினை கொலை செய்த அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால், அவரது தாயை கைது செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம்? உடுமலை சங்கர் ஆணவ படுகொலையில் குடும்பத்தினர் யாரும் நேரடியாக தலையிடவில்லை கூலிப்படையை ஏவிவிட்டு படுகொலை செய்தார்கள்.
ஆனால், கௌசல்யாவின் தாய், தந்தை உறவினர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள். இதே கோரிக்கையை கவின் பெற்றோர்களும் எழுப்புகிறார்கள். தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் கடமைகளை ஆற்றும் என்று நான் நம்புகிறேன்.
திருமா சொன்ன கருத்து:
இது, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மட்டுமல்ல வடமாவட்டங்களில் மட்டுமல்ல மேற்கு மாவட்டங்களிலும் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக 10 ஆண்டுகளாக சாதியவாத சக்திகளும் மதவாத சக்திகளும் சாதி பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
சாதி பெருமிதத்தின் அடிப்படையில் இது போன்ற கொலைகளை ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள். வட இந்திய மாநிலங்களில் தான் இது போன்ற படுகொலைகள் அவ்வப்போது நடக்கும். இப்போது, தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் இது அதிகரித்து வருகிறது.
அதற்கு சாதியவாத சக்திகளும் மதவாத சக்திகளும் திட்டமிட்டு பரப்புகின்ற சாதி பெருமை அரசியல் தான் காரணம். இதனை தடுப்பதற்கு தேசிய அளவில் ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஜனநாயக சக்திகள் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்திய அரசும் இந்த கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. மாநில அரசுகளும் இதனை கண்டு கொள்ளவில்லை தமிழ்நாடு உட்பட. இந்திய அரசு, ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை இயக்கலாமா என்கிற கருத்தை மாநில அரசிடமிருந்து கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கருத்து எதுவும் சொல்லவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதற்கிடையிலே உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஆணவக் கொலைகள் தொடர்பாக சில வழிகாட்டுதல்களை தந்திருக்கின்றார்கள். எப்படி வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எப்படிப்பட்ட இழப்பீடுகளை தர வேண்டும்.
காவல்துறை அதிகாரிகளின் உடனடி கடமைகள் என்ன என்பன போன்ற வழிகாட்டும் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கூட தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் பின்பற்றவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாக நேற்று உள்துறை அமைச்சர் அமிச்சாவை சந்திக்க முயற்சித்தோம். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை. அவரது அமைச்சகத்தில் நாங்கள் இந்த சம்பவம் குறித்து கோரிக்கை வலியுறுத்தியுள்ளோம். உடனடியாக ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்" என்றார்.
நெல்லை கவின் ஆணவ படுகொலைக்கு தாமதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்வினை ஆற்றவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், சம்பவம் நடந்த உடனேயே தகவல் வெளியாகிவிட்டது உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கு கண்டனங்களை பதிவு செய்து விட்டோம். உடனடியாக காவல்துறை அதிகாரிகளை அணுகி இது தொடர்பாக கோரிக்கை எழுப்பியது விடுதலை சிறுத்தைகள் தான்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பெற்ற பிள்ளையை கூட கொடூரமாக படுகொலை செய்யக்கூடிய உளவியல் இருக்கிறது. இதை ஒரு தேசிய அவமானமாக கருத வேண்டும். பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக கொலை செய்யும் அளவிற்கு தூண்டுகிறது என்றால் சாதி எப்படி ஒரு மனநோயாக மாறி உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலிலே சட்டம் இயற்றுவதற்கு என்ன தயக்கம்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.





















