Varunkumar IPS : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பதவியேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ்
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐ.பி.எஸ். இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு, மாநிலம் முழுவதும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐ.பி.எஸ். கடந்த சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக வி.வருண்குமார் ஐ.பி.எஸ். இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் கையெழுத்திட்டு காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அவருக்கு காவல்துறையினர் உரிய வரவேற்பை அளித்தனர்.
புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரக்கன்றை நட்டார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து 6379904848 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். வருண்குமார் ஐ.பி.எஸ். முன்னதாக சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் கணினிப்பிரிவு எஸ்.பி.யாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.