மருவிய பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு...வன்முறையில் இருந்து பாதுகாப்பு...முதலமைச்சருக்கு திருநங்கைகள் உரிமை ஆர்வலர் கடிதம்..!
மருவிய பாலின மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கவும் உள்ஒதுக்கீடு வழங்கவும் லிவிங் ஸ்மைல் வித்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு பட்ஜெட் மாநிலத்தின் சட்டப்பேரவையில் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட் தாக்கலின்போது அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்:
அதன்படி, திமுகவின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான அண்ணாவின் பிறந்தநாள் அன்று அதாவது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை வழங்கப்படும் என நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இது மட்டும் இன்றி, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் தியாகராஜன் வெளியிட்டிருந்தார். 410 கோடி ரூபாய் செலவில் கோவை, விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிய சிப்காட் அமைக்கப்படும். 800 கோடி ரூபாய் செலவில் சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இந்த ஆண்டு 30,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு. மதுரையில் 8500 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். கோவை அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் வரை ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
மருவிய பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு வேண்டும்:
பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என பல்வேறு தரப்பு மக்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியிருந்தாலும், மருவிய பாலினத்தவருக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மருவிய பாலினத்தவரின் உரிமைகளுக்காக போராடி வரும் லிவிங் ஸ்மைல் வித்யா இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
மருவிய பாலின மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கவும் உள்ஒதுக்கீடு வழங்கவும் லிவிங் ஸ்மைல் வித்யா கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல, பேருந்து நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் டீக்கடைகள் மற்றும் உணவுக்கடைகள் அமைக்க மருவிய பாலினத்தவருக்கு நிதியுதவி வழங்கவும் வித்யா கோரியுள்ளார்.
சென்னை சங்கமம் மற்றும் பிற மாநில அரசின் நிதியுதவியில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மருவிய பாலினத்தவருக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மருவிய பாலினத்தவர், அவர்களது குடும்பத்தினரால் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாக்க சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த முறையான ஆவணங்கள் மற்றும் அத்தகைய வன்முறையைத் தடுக்க பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க: பற்றவைத்த இடஒதுக்கீடு விவகாரம்...கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் வெளியே வெடித்த கலவரம்.. நடந்தது என்ன?