1.68 லட்சம் பேருக்கு கட்டணத்தை திருப்பி தரும் தமிழக மின்சார வாரியம் - என்ன காரணம்?
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பல்வேறு அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் தற்போது அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பல்வேறு பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பல்வேறு அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் தற்போது அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றது. இதனிடையே முன்னதாக மதிப்பீட்டாளர், இளநிலை உதவியாளர் (கணக்குகள்), உதவி பொறியாளர் (மின்சாரம், இயந்திரவியல் மற்றும் சிவில்), கள உதவியாளர் (பயிற்சியாளர்), உதவி கணக்கு அலுவலர் போன்ற 5,318 காலியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்ப தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 5,318 காலியிடங்களுக்கான தேர்வு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படவிருந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா தொற்று காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைத்து அரசு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பல்வேறு பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த தேர்வுக்கு கிட்டதட்ட 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தேர்வு கட்டணமாக ரூ.1200 வசூலிக்கப்பட்ட நிலையில் , தற்போது கட்டணம் அனைவருக்கும் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளியான இந்த அறிவிப்பு மின்வாரிய வேலையை நம்பி காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். ஆள்தேர்வு அறிவிக்கைகள் ரத்து செய்யப்படுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியிருக்கும் காரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்கப் பட்டிருப்பது மிகவும் சரியான, வரவேற்கத்தக்க நடவடிக்கை தான்.
ஆனால் மின்வாரிய அறிவிப்பு வெளியாகி இரு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் போட்டித்தேர்வுகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடத்தப்படாததால் அதற்காக விண்ணப்பித்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடத்தவிருக்கும் போட்டித் தேர்வு விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுவிட்ட நிலையில் மின்வாரியத் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி நடத்துவதாக இருந்தால், அதற்கு குறைந்தது இன்னும் ஓராண்டு ஆகும். எனவே மின்வாரிய பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, பழைய விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வுகளை மட்டும் டிஎன்பிஎஸ்சி மூலம் அடுத்த ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிவுகளை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்