TN weatherman: அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், நவம்பர் மாதத்தில் தற்போது வரை குறைவான மழை அளவு பதிவாகியுள்ளதாகவும், இருந்த போதும் வரும் நாட்களில் நல்ல மழை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்

ஏமாற்றியதா வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை ஆரம்பமே அசத்தலாக தொடங்கிய நிலையில், கடந்த 10 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நீடிக்கிறது. இதன் காரணமாக எப்போதும் இல்லாத வகையில் வட கிழக்கு பருவமழை நவம்பர் மாதம் மோசமான நிலையில் உள்ளது. நவம்பர் 10ஆம் தேதி வரை வெறும் 15 மி.மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. எனவே வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டின் நவம்பர் காலத்தில் இயல்பான மழை அளவு அளவு 181.7 மி.மீ. பெரும்பாலாலும் நவம்பர் மாதம் நல்ல மழை கிடைத்திருந்தாலும் அரிதாகவே பருவமழை தோல்வி அடைந்திருக்கும். வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் 425 மி.மீட்டர் மழைப்பொழிவு கூட இருந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் நவம்பர் மாத பருவமழை நிலவரம்
2018 - 159.1 mm
2019 - 125.8 mm
2020 - 203.3 mm
2021 - 425.3 mm
2022 - 178.5 mm
2023 - 233 mm
2024 - 140.2 mm
2025 - 15.1 mm (till 10.11.2025)
தமிழகத்தில் மீண்டும மழை எப்போது.?
நவம்பர் 10, 2025 வரை 15.1 மி.மீ மட்டுமே பதிவாகியிருப்பதால், கடந்த பத்தாண்டுகளில் மிக மோசமான நிலையில் இந்த நவம்பர் மாதம் உள்ளது. இருப்பினும், நவம்பர் 17-20 மற்றும் நவம்பர் 24-26 (± 1 நாள்) ஆகிய தேதிகளில் மழைக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. நவம்பர் 11-13 வரை ஓரளவு மழை பெய்யும், தென் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிலும் தமிழ்நாட்டிற்கு நவம்பர் 17 முதல் 20 மழைக்கான வாய்ப்பு நன்றாக இருக்கும்.
இருந்த போதும் தற்போதைய கேள்வி என்னவென்றால், குறைந்தபட்சம் 125 மிமீ மழையை தாண்ட முடியுமா? என்பது தான். எனவே வரும் நாட்களில் மழை அளவை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு
இதனிடையே டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், கிழக்குத் திசை காற்று வந்து சேர்வதும், குளுமையான வடக்கு காற்றும் ஈரப்பதமான கிழக்கு காற்றும் மோதுவதாலும் கடலோரப் பகுதிகளில் வடகிழக்கு காற்று குவிதல் ஏற்பட்டு வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்குகிறது என தெரிவித்துள்ளார்.
நாள் 1 (11.11.2025)
கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழை வரை பெய்யும், ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாள் 2 (12.11.2025)
காவிரி டெல்டா & தென் கடலோர மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழையும், ஆங்காங்கே ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
வட கடலோரத்தின் ஒரிரு இடங்களிலும் நாளையும் மழை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.





















