TN Nursing Colleges: 11 செவிலியர்கள் கல்லூரி என்ன ஆச்சு? தவிக்கும் மருத்துவமனைகள் - வெளிநாடுகளில் குவியும் தமிழக நர்ஸ்கள்
TN Nursing Colleges: தமிழ்நாட்டில் போதிய கல்லூரிகள் இல்லாததால், தேவையான அளவிலான செவிலியர்கள் இன்றி சுகாதாரத்துறை தத்தளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN Nursing Colleges: தமிழ்நாட்டில் செவிலியர் கல்லூரிகளே இல்லாத சில மாவட்டங்களும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை:
தமிழ்நாடு, நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், மருத்துவ படிப்பிற்கான அதிக இடங்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்திலும் உள்ளது. புதியதாக 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், குறைந்த செலவில் சர்வதேச தரத்திலான சிகிச்சை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் பேர் பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே, தமிழ்நாடு வந்து செல்கின்றனர். இப்படி பல சிறப்புகளை கொண்டிருந்தும், மருத்துவத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் செவிலியர்கள் போதுமான அளவில் தமிழ்நாட்டில் இல்லை என்பது பெரும் பிரச்னையாக உள்ளது.
செவிலியர்கள் பற்றாக்குறை:
நாட்டின் பல்வேறு பின்தங்கிய மாநிலங்களை போன்று தமிழ்நாடும், கூடுதல் செவிலியர் கல்லூரிகள் கட்டாயம் வேண்டும் என்ற சூழலில் உள்ளது. மருத்துவத்துறை தொடர்ந்து ஓய்வின்றி இயங்குவதில், செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால், 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் வெறும் 1.7 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி, ஆயிரம் பேருக்கு 3 செவிலியர்கள் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால், தமிழ்நாட்டில் 65 ஆயிரம் செவிலியர்களுக்கான பற்றாக்குறை உள்ளது.
பற்றாக்குறை தீருமா?
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 500 செவிலியர் கல்லூரிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், 2024 மற்றும் 2027 க்கு இடையில் சுமார் 98,000 செவிலியர் பட்டதாரிகள் பதிவு செய்வார்கள் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டால், 2027ம் ஆண்டிற்குள் செவிலியர்கள் பற்றாக்குறை தமிழ்நாட்டில் தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது. அதேநேரம், அரசின் கணிப்பு நிறைவேறாமல் போக இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக, துறைசார் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வெளிநாடுகளில் தமிழக நர்ஸ்கள்:
வல்லுநர்கள் எச்சரிக்கும் காரணங்களில் முதன்மையானது சமச்சீர் அற்ற செவிலியர்களின் பரவல். அதாவது, கிராமப்புறங்களை காட்டிலும் நகர்ப்புறங்களில் அதிக செவிலியர்கள் உள்ளனர். இரண்டாவது காரணம், கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு செவிலியர்களின் வேலை இழப்பு விகிதம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பிற்காக தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே சுமார் 5,000 செவிலியர்கள் அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொட்டிக்கொடுக்கும் வெளிநாடுகள்:
செவிலியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்வதற்கான சோதனை தேர்வுகள் தற்போது எளிதாகியுள்ளது. அதோடு, வெளிநாடுகளில் செவிலியர்களுக்கான தேவை அதிகரித்து இருப்பதால், அவர்களுக்கு ஊதியமும் அள்ளிக் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக சென்னை மற்றும் கோவை போன்ற பெருநகரங்களில், அதிகபட்சமாக செவிலியர்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. அதேநேரம், வெளிநாடுகளில் ரூ.2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. திறமையான மற்றும் தகுதி வாய்ந்த செவிலியர்களுக்கு, வெளிநாடுகளில் குடியுரிமையும் வழங்கப்படுக்கிறது. செவிலியர்களுக்கான வாழ்க்கை தரமும், இந்தியாவை காட்டிலும் வெளிநாடுகளில் சிறப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான செவிலியர்களும், வெளிநாட்டில் பணிபுரிய விரும்புவதாக தெரிகிறது
தவிக்கும் மருத்துவமனைகள்:
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனை நிர்வாகங்கள், எதிர்பார்க்கும் அளவில் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் கிடைப்பதில்லை என கவலை தெரிவிக்கின்றன. அரசு மருத்துவமனைகளிலும் கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. "ஐசியுவில் உள்ள 12 மோசமான நோயாளிகளுக்கு இரவுப் பணியில் ஒரு செவிலியர் அல்லது சுமார் 40 நோயாளிகள் உள்ள வார்டில் ஒரு செவிலியர் மட்டுமே இருக்கும் சூழல் நிலவுவதாக” அரசு செவிலியர்களே குற்றம்சாட்டுகின்றனர். மேலும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
11 செவிலியர்கள் கல்லூரி என்ன ஆச்சு?
தமிழ்நாட்டில் புதியதாக 11 செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு சொன்னதை, விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவிலியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பான கோப்புகளுக்கு நிதித்துறை இன்னும் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவக் கல்வித்துறையில் இது குறித்து விசாரித்தபோது, அனைத்து மாவட்டங்களிலும் அரசு அல்லது தனியார் செவிலியர் கல்லூரிகள் இருப்பதை உறுதி செய்ய அரசுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக விளக்கமளிக்கின்றனர். நீலகிரி, ராமநாதபுரம், திருப்பத்தூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஒரு செவிலியர் கல்லூரி கூட இல்லாதது குறிப்பிடத்தக்கது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்க கடந்த 2023ம் ஆண்டே மத்திய அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் செவிலியர் கல்லூரிகள்:
தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மூன்று ஆண்டு டிப்ளமோ மற்றும் பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி படிப்புகளையும், 271 கல்லூரிகள் நர்ஸிங்கில் பி.எஸ்.சி., நர்ஸிங் வாய்ப்புகளை வழங்குகின்றன. 25 அரசுக் கல்லூரிகளும் டிப்ளமோ வாய்ப்புகளையும் வழங்குகின்றன. அதேநேரம், 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் எம்.பி.பி.எஸ்., டிகிரி படிக்க வாய்ப்பளிக்கும் சூழலில், நர்ஸிங் டிகிரிக்கு என 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. எனவே புதிய செவிலியர் கல்லூரிகளை தொடங்க அரசு முன்வர வேண்டும் என துறை சார் வல்லுநர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதன் மூலம், அரசு மருத்துவமனைகளுக்கும் கூடுதல் இண்டெர்ன் செவிலியர்கள் கிடைப்பார்கள் என்ற நன்மையும் உள்ளது.
அதிக செவிலியர் கல்லூரிகள் கொண்ட மாவட்டங்கள்:
- சென்னை - 51
- கோவை - 40
- சேலம் - 22
- வேலூர் - 20
- மதுரை - 17
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















