இனி ஒவ்வொரு புதன்கிழமையும் மக்களை சந்திக்கனும்.. எஸ்.பி., கமிஷனர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையர்கள் வாரந்தோறும் இனி புதன்கிழமை மக்களை சந்திக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மட்டுமின்றி பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை களைவதும் காவல்துறையின் இன்றியமையாத பணியாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எனப்படும் எஸ்.பி. உயர் அதிகாரியாக உள்ளார். அவர்களை விட உயர்பதவியில் காவல் ஆணையர்கள் உள்ளனர்.
வாரத்தில் ஒருநாள் கட்டாயம்:
காவல் நிலையங்களில் பொதுமக்கள் தங்களது குறைகளை புகாராக அளித்தாலும், தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்படும்போது உயர் அதிகாரிகளை சந்தித்து தங்கள் குறைகளை மனுக்களாக அளிப்பது வழக்கம். பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளை சந்திக்கும் நடைமுறை இருந்தாலும், இந்த சந்திப்பை கட்டாயம் ஆக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.
மக்களை சந்திக்க உத்தரவு
மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரந்தோறும் புதன்கிழமை காலை முதல் மாலை வரை ஆணையரகம் மற்றும் மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களில் பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று அதுதொடர்பான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து வருகின்றனர். குறைதீர்க்கும் நாள் எனப்படும் இந்த நாளில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து அவர்களின் குறைகளுக்க தீர்வு காணவும் இந்த நாள் பயன்பட்டு வருகிறது. இதேபோல, தற்போது பொதுமக்களும் தங்களது குறைகளை தீர்ப்பதற்காக காவல்துறை அதிகாரிகளை நேரில் சந்திக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, பொதுமக்கள் தங்களது குறைகளை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கூறுவதுடன், வழக்கின் விவரங்களையும் விவரமாக எடுத்துக்கூற வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Chennai New Commissioner: சென்னையின் புதிய கமிஷனர் யார்..? ரேஸில் உள்ள 3 பேர் யார்? - முழு விவரம்..!