Irunga Bhai: "இருங்க பாய்" குரலுக்குச் சொந்தக்காரர் இவரா? இன்ஸ்டாகிராமை அலறவிட்ட சாமானியன்!
இன்ஸ்டாகிராமில் கடந்தாண்டு இறுதியில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டான இருங்க பாய் என்ற ஆடியோவிற்குச் சொந்தக்காரர் யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதள வளர்ச்சிக்குப் பிறகு இணையத்தில் தங்களது பேச்சு, யதார்த்தமான செயல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பலரும் ட்ரெண்டாகி வருகினறனர். இந்த நிலையில், கடந்தாண்டு ஒரு தொலைபேசி ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது.
இருங்க பாய்:
அதாவது, கறிக்கடை பாயா நீங்க? என்ற ஒரு நபர் கேட்க மறுமுனையில் பேசும் நபர் இருங்க பாய்.. என்று கூறிவிட்டு அவர்களை திட்டினார். இந்த ஆடியோ இணையத்தில் வைரலாகியது. ஆனால், இதைப் பேசியவர் யார்? என்று தெரியவில்லை. அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற சவடிக்கா பாடலிலும் இருங்க பாய் என்ற அவரது குரல் அப்படியே இடம்பெற்றது.
சொந்தக்காரர் யார்?
இந்த குரலுக்குச் சொந்தக்காரர் யார்? என்ற கேள்வி இணையவாசிகள் மத்தியில் பல நாட்களாக நீடித்து வந்த நிலையில், தற்போது அவர் யார்? என்று தெரியவந்துள்ளது. இவர் ஊட்டியைச் சேர்ந்தவர். இவர் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "சின்ன பிரச்சினையா இருந்ததை இப்போ பெருசாக்கிட்டாங்க. யூ டியூப், இன்ஸ்டாகிராம்ல போட்டு பெருசாக்கிட்டாங்க. எனக்குப் படிப்பறிவு கிடையாது. கேக்குவறங்க கேட்டு நீ பேசுனது இதாகிடுச்சு என்று சொல்றாங்க. இன்ஸ்டாகிராம்ல விட்டு டெவலப் ஆகிடுச்சு என்று சொல்றாங்க.
மன உளைச்சல்
நான் உடம்பு சரியில்லாம போயிட்டு வீட்ல இருக்கேங்க. அஜித் படத்துல கூட இருங்கபாய்னு என்ற வாய்ஸ்தான். ஓடோடி வெட்டிப்புடுவேனு நான்தான் பேசுனது. ஒரு நாளைக்கு 100, 200 கால் வரும். என்ன பண்ற? எங்க பண்றனு? பொழப்பு எல்லாம் கெடுத்துட்டாங்க இந்த மாதிரி கூப்பிட்டு.
அன்னைக்கு மட்டும் 50 போன் பண்ணிட்டு இருந்தாங்க. 10 கிலோ கறி கிடக்குமானு கேட்டாங்க. ஏன் தம்பி இப்படி போன் பண்ணாதீங்க? மன உளைச்சல்ல இருந்தேன். அவனுங்களுக்கு நக்கல். எனக்கு வருத்தம்.
அந்த கோவத்துல இருங்க பாய்.. ஓடோட வெட்டிப்புடுவேனு நான்தான் பேசுனது. வேணும்னு பேசல. அந்த கோவத்துல பேசுனது. சம்சாரம் மட்டும்தான் வேலைக்கு போயிட்டு இருக்காங்க. நான் உடம்பு சரியில்லாம இருக்கேன். நீங்க பாத்து ஏது செஞ்சாலும் சரி. எந்த உதவி செஞ்சாலும் சரி.
இவ்வாறு அவர் கூறினார். இரண்டு குழந்தைகள் உள்ள இவர் விவசாயக் கூலி ஆவார். உடல்நலம் சரியில்லாத நிலையில் தொடர்ந்து அழைப்பு வந்ததால் தான் கோபத்தில் அவ்வாறு பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ஏதேனும் உதவி செய்தாலும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதவுமா விடாமுயற்சி குழு?
இவரது குரல் விடாமுயற்சி படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவருக்கு விடாமுயற்சி படக்குழு உதவி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

