Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று ஈரோடு தொகுதியில் தாங்கள் போட்டியிடபோவதில்லை எனவும், திமுகவே போட்டியிடும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 2023 ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே அவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் காலியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுமா இல்லை திமுக சார்பில் யாரவது போட்டி இடப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தொடர் இறப்பால் இவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிட முன்வரவில்லை என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாது எனவும், திமுகவே போட்டியிடும் என அறிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,,”2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.





















