CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
TN Assembly CM Stalin: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சவாலில், முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

TN Assembly CM Stalin: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதே உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பேச்சு
சட்டப்பேரவையில் நேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை குறிப்பிட்டு பொள்ளாச்சி பாலியல் கொடுமை நடைபெறும்போது, புகார் கொடுத்தவுடன் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தோம்” என தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் சவால்
உடனே எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ இதை நீங்கள் சபாநாயகரிடம் நிரூபிக்கவில்லையென்றால், அதற்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் சொல்கிற தண்டனையை நான் ஏற்றுக்கொள்ள தயார். நான், சொன்னதை நிரூபிக்கவில்லையென்றால் நீங்கள் சொல்கிற தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள்,சொன்னதை நிரூபிக்கவில்லையென்றால், நான் சொல்வதை ஏற்றுக்கொள்ள தயாரா? 24-2-2019 அன்று புகார் கொடுத்ததாக சொல்கிறீர்கள். எப்.ஐ.ஆர். போட்ட தேதி எப்போது என்று சொல்லவில்லையே?” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
முதலமைச்சர் சொல்வதே உண்மை
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் 12 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின், அதுதொடர்பான ஆதாரங்களை இன்று சட்டப்பேரவை சபாநாயகரிடம் சமர்பித்தார். புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுத்ததாக பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க. சார்பிலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இரண்டையும் பரிசீலித்த சபாநாயகர் அப்பாவு, “பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் 12 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சொல்வது தான் உண்மை” என தீர்ப்பளித்துள்ளார். இதன் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தான் விடுத்த சவாலில் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

